Friday, 16 October 2015

எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாத, தங்கள் அன்றாட வாழக்கைக்காகத் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள் சிலரிடம் மாட்டுக்கறிக்கு எதிராக நடப்பவைகளைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் சிலர் பள்ளிக்கல்வி வரை படித்தவர்கள், சிலர் கல்லூரி முடித்து வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தலைவிகள் இப்படி.. ஆனால், எல்லோருமே மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள். அவர்களிடம் மாட்டுக்கறி மீதான தடையைப் பற்றிக் கேட்டபோது, எல்லோரும் ஒரே மாதிரி, "அதனால் என்ன?, தடை செஞ்சா செஞ்சுக்கட்டும்" என்றார்கள்.

அவர்களுடைய உணவில் மாட்டுக்கறி இல்லாததால், அதற்குத் தடை விதிப்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. "சரி மாட்டுக்கறி சாப்பிடுறவங்களைக் கொலை செய்யலாமா?" என்று கேட்டேன். "ஐயோ, பசு மாட்டைக் கொன்னா, பாவம்னு சொல்வாங்க, அதுக்காக மனுஷனைக் கொன்னால், அது பெரிய பாவமாச்சே" என்றார்கள்.

இதுதான் இந்த விஷயத்தில் சாதாரண மக்களின் புரிதல் / நிலைப்பாடு.
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் மக்களின் உணவை சூழலியல் காரணங்களுக்காக அன்றி, மத நம்பிக்கையின் பெயரால் தடை செய்வதில் உள்ள உரிமை மீறலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எளிய மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அதைவிடக் கொடுமை, தாத்ரி படுகொலைப் பற்றி நான் பேசிய 80% பேர்களுக்குத் தெரியவில்லை. சீரியல்களுக்கிடையே அவர்கள் பார்க்கும் அரை மணிநேரச் செய்திதான் அவர்களுக்கும், உலகத்திற்கும் இடையேயான தொடர்பு. இந்த மாதிரி சின்ன விஷயங்களெல்லாம் நம்முடைய அரைமணிச் செய்திகளில் ஓரிரு நாட்களுக்குச்\ சில நொடிகள் இடம்பெற்று, இப்பொது காணாமல் போய்விட்டன.

இந்தியாவில் ஒருவர் தான் விரும்பிய எந்த மதத்தையும் பின் தொடரலாம். பின் தொடர்ந்தாலும், அந்த மதத்தின் எல்லா வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்பது தான், நமக்குள்ள சுதந்திரம். ஒரு மதத்தில் உள்ள தவிர்க்கப்பட்ட விஷயங்களை நாம் செய்தால், யாரும் நம்மை மதத்தை விட்டு விலக்கி வைக்க முடியாது. ஏனெனில் எந்த மதத்துக்கும், அதிகாரம் ஒரு புள்ளியில் இல்லை. நாம் ஒரு மதத்தைப் பின்பற்றுவதை எந்த ஒரு தனி நபரும், அமைப்பும் அங்கீகரிக்கத் தேவையில்லை. பிடித்தால் இருக்கலாம். அவ்வளவு தான். மதத்தைப் பின்தொடரவே இப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாத போது, மதத்தின் வழி முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எவ்வளவு நகைப்புக்குரியது? நாம் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்களையே இப்படிக் கட்டாயப் படுத்த முடியாத போது, நம்முடைய மத நம்பிக்கைக்காக, வேறு மதத்தவரைக் கட்டாயப்படுத்துவது அதைவிடகேவலமான ஒரு செயல் தானே.

யாருடைய சாப்பாட்டுத் தட்டையோ பறிக்கிறார்கள் என்று விட்டுவிட்டால், நாளை நம் தட்டைப் பறிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இதே கும்பல், நாளை இந்து மதம் சைவத்தைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறது என்று ஆடு, கோழி, மீன் தின்பதை தடை செய்தால் என்ன செய்வது? இன்னும் முத்திப் போய், வெங்காயம் பூண்டையும் தடை செய்தாலும் செய்வார்கள். இவர்களுக்கு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய கவலையில்லை, நம் மீது அவர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தவேண்டும் என்பதே முக்கியம். ஜாதி, மத அடிப்படைவாதிகள் எல்லோரும் இதே வகையினர் தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது எதிர் சாரரைத் தாக்குவது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்கள் தங்கள் சொந்த ஜாதி, மத மக்களின் மீது தங்கள் அடக்குமுறையை இறுக்குகிறார்கள்.

இதையெல்லாம் சாதாரண மக்களிடம் சொல்லிப் புரியவைப்பது யார்? ஆயிரம் போராட்டங்கள் நடத்தலாம், ஆனால் யாருக்காகப் போராடுகிறோமோ, அவர்களுக்கு நாம் எதற்காகப் போராடுகிறோம் என்பது தெரியவேண்டுமல்லவா? சரி யார் இதை மக்களிடம் கொண்டு சென்று புரியவைப்பது? வேறு யார் கலைஞர்கள் தானே? கலையின் தொடக்கமே இப்படி வந்தது தான். மனிதன் தனியாகச் சுற்றித் தெரிந்தபோது, அவனுக்கு மொழியோ, ஓவியமோ, குரலோ தேவைப்படவில்லை. ஒரு குழுவாக வாழத் தொடங்கியபோது தகவல்களைப் பரப்ப, தனக்குத் தெரிந்த அத்தனை கலை வடிவங்களையும் முயன்றான். அது அந்தக் குழுவுக்கும், அதனைத் தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கும் பயனளித்து வளர உதவியது.

துரதிருஷ்டவசமாக இன்று நம் கலையின் அத்தனை வடிவங்களும் சினிமா, டிவி என்பவற்றுக்குள் முடங்கி விட்டது. மக்களுக்குக் கல்வி அறிவு குறைவாக இருந்த காலத்தில் இப்படி நாடகம், சினிமா போன்ற ஊடகங்கள் பிரபலமாக இருந்ததைப் போல, எழுத்தறிவு உயர்ந்த பிறகு மற்ற கலைகளும் வளர்ந்திருக்க வேண்டும் .ஆனால் நம் நாட்டில் எல்லாமே தழைகீழ். சினிமா, டிவி போன்ற ஊடகங்களைத் தவிர்த்து மக்களிடம் சென்று சேர்பவர்கள் என்று பார்த்தால் எழுத்தாளர்கள் தாம்.
தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் பிற தலையீடுகள் இன்றி இதெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்தாளர்களாலேயே முடியும்.

அது என்ன எழுத்தாளர்களுக்கு மட்டும் சமூக அக்கறை வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்? என்று சிலர் கேட்பதுண்டு. யாரால் முடியுமோ அவர்களிடம் தானே கேட்க முடியும். எழுத்தாளனை யார் மதிக்கிறார்கள்? சினிமாக்காரர்களைத் தானே மதிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். எப்பொழுது எழுத்தாளர்கள் தனக்காகத்தான் எழுதுகிறார்கள் என்று பாமர மக்கள் உணர்கிறார்களோ, அப்போது நிச்சயம் மதிப்பார்கள். சினிமா ஹீரோக்கள், மக்களுக்காக உழைப்பதைப் போல நடிக்கவாவது செய்கிறார்கள். நம் ஊர், பெரும்பான்மை எழுத்தாளர்கள் நாட்டில் என்ன நடந்தாலும் வாய் திறப்பதில்லை. இதுபோன்ற படுகொலையை விடுங்கள், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், "அதனால் எனக்கென்ன, போன வாரம் ஜப்பான் போனதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறேன், வாசியுங்கள்" என்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் சிந்தனைத் தளத்தை உயர்த்துபவர்கள் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களுமே. அதற்காக எழுத்தாளர்களைத் தெருவில் இறங்கிப் போராடச் சொல்லவில்லை. அவர்களின் ஆயுதம் எழுத்து. எளிய மக்களுக்கு, இந்த மாட்டுகறித் தடை போன்ற விஷயங்களின் பின்நாள் உள்ள அரசியலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எழிமையாக எழுதிப் புரிய வைத்தால் போதும். ஒவ்வொருவரும் தாங்கள் தொடர்ந்து எழுதும் பத்திருக்கைகளில், இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருகிறேன், பிரசுரியுங்கள் என்று நிர்பந்திக்கலாம். தங்களின் வலைத்தளங்களில் எழுதி, வாசகர்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். கொலை காரனெல்லாம், சமூக வலைத்தளத்தின் வீச்சால் ஆடியோ வெளியிடும்போது, ஏன் எழுத்தாளர்களால் முடியாது?

தொடர்ச்சியாக இதைப்பற்றி விவாதிக்கும்போதும், எழுதும்போதும் எப்படியாவது மக்களின் காதுகளுக்கு எட்டிவிடும். எதுவும் முடியாதபோது, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கலாம். நம் ஊர் எழுத்தாளர்கள் எழுதுவதும் இல்லை, விருதைத் திருப்பிக் கொடுப்பவர்களையும் நக்கலடிக்கிறார்கள். ஐயா சாமிகளே, நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய விருதுகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அட்லீஸ்ட் எழுதுங்கள்.