Tuesday, 31 March 2015

அன்புள்ள திராவிடக் கண்மணிகளுக்கு,
(சுயமரியாதை இயக்கம், தி.க முதல் லதிமுக வரை)

வணக்கம்,
நான் ஒரு திராவிடன் என்பதை, என்னுடைய ஒரு மூன்று நான்கு தலைமுறைகளை ஆராய்ந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்கு முன்பு, என் மூதாதையர் எந்த இனக்குழுவில் இருந்தனர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனித இனத்தின் ஆயுளான பல கோடி ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த மூன்று நான்கு தலைமுறைக் காலம் என்பது மிகவும் குறுகியக் கட்டம் என்பதால், என்னை ஒரு குறுப்பிட்ட இனக்குழுவுக்குள் சுருக்கிக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

ஆனால், திராவிட இயக்கங்களின் சாதனைகளைக் கருதி என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறேன். ஆனாலும், திராவிடக் கொள்கைகளில் என்னை முழுதாக இணைத்துக் கொள்ள முடிவதில்லை. எந்த ஒரு தனிக் கொள்கையும், மனித குல மேம்பாட்டிற்கான முழுத் தீர்வாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. திராவிடம், தனி தேசியம் என்ற கொள்கைகளைத் தவிர்த்து, சுயமரியாதை, பகுத்தறிவு, வருணாசிரம எதிர்ப்பு, தாய்மொழியைப் பேணுதல், பெண்களுக்கு சம உரிமை போன்ற பெரியாரின் கொள்கைகளை எல்லா நேரங்களிலும் முடியாவிடிலும், முடிந்த அளவு கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

பெரியாருக்குப் பிறகு, அதிகம் இந்தக் கொள்கைகள் பரவலாக்கப்பட்டு, திமுகவின் ஆரம்பக் கட்டத்தில் உச்சம் பெற்று, பிறகு படிப்படியாகக் குறைந்து, இன்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். திராவிட இயக்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இடுவதைத் தடுக்க முடிந்ததை குறிப்பிடுகிறோம். ஆனால், இன்றைய நிலவரம் என்ன என்பதை கொஞ்சம் களத்தில் இறங்கிப் பார்த்தால் தெரியும். ஐந்தாவது படிக்கும் சிறுவர்களுக்கும் கூட தாங்கள் அச்சடிக்கும் ஜாதிப் பெயரிட்ட பனியனை அணிவித்து, வேறுபாட்டை வளர்க்கத் தொடங்கி விடுகிறார்கள். பின்னால் ஜாதிப் பெயரிட்டால் வரும் குற்ற உணர்ச்சியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது பெண்களும் இதை பெரிதும் விரும்புகிறார்கள் (பெரியார் விழைந்த சமஉரிமை). முன்பைவிட இப்பொழுது கவுரவக் கொலைகள் அதிகமாக நடக்கின்றன, ஜாதிச் சங்கங்கள் நினைத்தால் யாரையும் மிரட்டவோ அடிக்கவோ முடிகிறது. பிராமண ஆதிக்கம், மெல்ல மெல்ல இடைநிலைச் சாதிகளின் கையில் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் திராவிடக் கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர இதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஒரு திராவிடக் கட்சி, ஒரு தேசியக் கட்சி என்று இருந்தபோது, மேடைகளில் எல்லாம் திராவிடக் கருத்துகள் முழங்கின. இன்று இரு திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே (அட்லீஸ்ட் பெயரளவில் திராவிடக் கட்சிகள்) போட்டி என்று ஆன பின்பு, ஒருவர் மாற்றி ஒருவர் வசை பாடவே நேரம் சரியாக இருக்கிறது.

ஒருவேளை இரண்டுக் கட்சிகளும், ஒரு தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்தால் மட்டுமே மீண்டும் திராவிடக் கொள்கைகள் மேடையேறும் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக தேசியக் கட்சிகளுக்கு அந்த அளவு மூளை வேலை செய்வதில்லை. சரி,  கட்சிகள் முன்னெடுக்காமல் மீண்டும் இந்த திராவிடக் கருத்துகளை மக்கள் சிந்திக்கப் போவதில்லையா என்று கேட்டால், அதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகத்தான் தோன்றுகிறது. இட ஒதுக்கீட்டையும், இந்தி எதிர்ப்பையும் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இன்றைய இளைஞர்களிடம் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகின்றன. அதற்கு துணையாக, தலைவர்களின் குறைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றி பேசிய ஒரு தலைவர், கடவுளை முற்றாக நிராகரித்த ஒரு தலைவர், சில நேரங்களில் கடவுள் வழிபாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்பதை எடுத்துக் கொள்ளலாம். தலைவர்கள் மட்டுமல்ல, கடைசி மட்டத் தொண்டன் வரை, கடவுளை ஏற்ப்பதா நிராகரிப்பதா என்று தெரியாமல் குழம்பி, கடைசியில் குடும்பக் காரணங்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், நீ கடவுளை நிராகரி என்று ஒரு தலைவன் சொன்னால், உடனே ஒரு தொண்டனால் தூக்கிப் போட முடியாது. எப்போது ஒருவனால் அப்படிச் செய்ய முடியும்? கடவுளை நம்பாமல், தனது பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொள்ள முடிந்தால் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கலாம். அதற்கு அடிப்படை, கல்வியும் வாசிப்பும். நமது கல்வியின் லட்சணம் என்னவென்று தெரியுமென்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால் கல்வியறிவால், ஒரு சில மூடநம்பிக்கைகளைத் தவிர்க்கலாம். மூட நம்பிக்கைகளுக்காகத்தானே, கடவுளை நிராகரிக்கச் சொல்கிறார் பெரியவர்.

ஆனால், சில தலைவர்கள் கடவுளை நிராகரித்துவிட்டு, மூட நம்பிக்கைகளை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. கி.வீரமணி அவர்களுடைய ஒரு மூடநம்பிக்கையை ஒருவர் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொண்டால்தால், அவர் கடைபிடிக்கும் கொள்கைகளின்மேல் மக்களுக்கும் நம்பிக்கை வரும். தனது வாகனங்களுக்கு ஒரே பதிவு எண்ணை (அது ராசியா என்று தெரியவில்லை) விரும்பி வாங்குவது, எந்த வகையிலும் பகுத்தறிவில் சேராது. இதற்காக அவர் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். இதை, ஒவ்வொரு திராவிட இயக்கச் சிந்தனையாளரும், தன்மீது வைக்கைப்பட்ட ஒரு கேள்வியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட கொள்கை என்ன? அதன்படிதான் நடக்கிறோமா என்று ஆராய வேண்டும்.

இதை விட்டுவிட்டு, பார்ப்பனீய சக்திகள் திராவிடச்செடியை  துளிர்க்கவிடாமல் செய்கின்றன என்று காட்டுக் கூச்சல் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ளாத எந்த இயக்கமும் நீண்டகாலம் உயிர்ப்புடன் இருக்க முடியாது. கம்யூனிசம் ஒரு சிறந்த உதாரணம்.

தி.கவின் இன்னொரு மூட நம்பிக்கை, தாலியறுக்கும் போராட்டம், மன்னிக்கவும், தாலி அகற்றும் போராட்டம். இதற்கான காரணமாகச் சொல்லப்படுவது, தாலி தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது, தாலியை அகற்றுவதன் மூலம், பெண்களை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சம உரிமையைப் பேணலாம். அட்லீஸ்ட், இது பெண்ணடிமைத்தனத்தைக் களைய முதல் படி என்று. வாலியின் கழுத்துச் சங்கிலி போல, தாலிக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், விஷயத்துக்கு வருவோம். கடந்த நாற்பது ஆண்டுகளை ஒப்பிட்டால், பெண்கள் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார்கள், அடிமைத்தளை கொஞ்சம் இளகியிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தாலியின் தடிமன் இந்தக் காலத்தில் குறைந்துவிட்டது என்பதா?

முன்பைவிட பெண்கள் அதிகமான அளவு, அடிப்படைக் கல்வி பெறுகிறார்கள், சுமாரான அளவு வேலைவாய்ப்பும் பெற்று, கொஞ்சம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள். இதுதானே காரணமாக இருக்க முடியும்? அப்படியெனில், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்து, அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டுமென்றால் எங்கிருந்து தொடங்க வேண்டும்? கல்வியில் இருந்து தானே? கல்வியில் தொடங்கி பொருளாதாரச் சுந்திரம், அதிகாரம் என்று எல்லாவற்றிலும் சரிசமமாகும்போது, தாலி என்பது தானாகவே ஒரு திருமண அடையாச் சின்னம் மட்டும் என்றாகிவிடும் தானே? அதை விட்டுவிட்டு, பின்னால் இருந்து தொடங்குவதை எப்படி ஒரு தொடக்கம் என்று சொல்ல முடியும்?

பெண்கள் தான் படிக்கிறார்களே, ஆண்களை விட தேர்ச்சி விகிதத்தில் அதிகம் இருக்கிறார்கள், அதில் என்ன இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஐடி, போன்ற சில துறைகள் தவிர, பல பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன, பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்கிறோம் வாருங்கள் என்று. அப்படியானால், பள்ளியில் அதிகம் தேர்ச்சி பெற்ற அந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பலர் கடமைக்காக ஒரு டிகிரி படிக்கவேண்டுமே என்று படிக்கிறார்கள், சிலர் கல்யாணம் வரை வேலைக்குப் போகிறார்கள், சிலர் குழந்தை பெறும்வரை. வெகுசிலர் தான், கடைசி வரை குடும்ப நெருக்கடிகளையும் சமாளித்து விருப்பத்துடன் வேலைக்குச் செல்கிறார்கள்.

சில காலமாக ஒரு விஷயம் கேள்விப்படுகிறேன், தன் பெண்ணை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ உருவாக்கினால், அதகேற்ற மாப்பிள்ளை தேட வேண்டும். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் சீர்வரிசை அதிகம் கேட்பார்கள் என்பதால், தகுதி, திறமை இருந்தும் பல பெண்களை அவர்கள் பெற்றோர்கள் எதோ ஒரு டிகிரியுடன் நிறுத்துகிறார்கள். இப்படி பெண் கல்வி, இந்தச் சமுதாயத்தில் ஏதேதோ காரங்களால், சீரழிக்கப் பட்டுக்கொண்டிருக்கும்போது, உண்மையாக பெண்கள் விடுதலை என்பதை முதலில் கல்வியில் தானே தொடங்க வேண்டும்?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள பெண் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களுக்கு கல்வியின் பயனை விளக்கி, சமுதாயத்தில் சமபங்காற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது, தனது பெரியார் மணியம்மை பல்கழைக் கழகத்தின் மூலம், பள்ளிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த ஏழை மாணவிகளை படிக்கவைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது போன்ற புரட்சிகளை ஐயா கி.வீ நடத்தினால், கருப்புச்சட்டையுன் வரத் தயாராக இருக்கிறேன். மற்றபடி தாலி அகற்றுவதெல்லாம், அவர் தன்னை கோமாளி  என்பதை நிறுவுவதற்கு மட்டுமே உதவும்.

Wednesday, 25 March 2015

என்னிடம் உலகில் உனக்கைக் கவர்ந்த, மிகவும் சுவாரசியமான விஷயம் எதுவெனக் கேட்டால் "பெண்கள்" என்று தான் சொல்வேன். சலிப்பூட்டக் கூடிய எந்தப் பெண்ணையும் இதுவரை சந்தித்ததே இல்லை என்றுதான் சொல்வேன். பெண்களின் சில செயல்கள் சலிப்பூட்டச் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் சில செயல்கள் சலிப்பூடுகின்றன என்று சொல்வதற்கும் பெண்களே சலிப்பூட்டுகின்றனர் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

ஒரு எளிமையான, சாதாரணமான ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவானவை. அவை பெரும்பாலும், அவன் வளர்ந்த சூழலில் பொதுவாக பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகளின் நீட்சியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, நன்றாக சமைக்கத் தெரியவேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் / கூடாது இப்படி சாதாரணமானவை தான். ஆனால், கொஞ்சம் வாசிப்பு, சிந்திக்கும் தளத்தினுள் காலடி எடுத்துவைக்கும்போது, தன்னுடைய துணையோ, தோழியோ அதே போல சிந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனதில் முளைத்துவிடுகிறது.

நண்பன் ஒரு நாள் கவலையுடன் சொன்னான், " என் காதலி தீவிர விஜய் ரசிகை, எனக்கு இப்படி அமையும் என்று எதிர் பார்க்கவே இல்லை. நான் கிம்கிடுக் பற்றிப் பேசினால், ஆதி அளவுக்கு இருக்குமா? என்றாள்.. கடைசிவரை ஒத்துவருமா என்று தெரியல மச்சி". சிரித்துக்கொண்டே கேட்டேன், "எதற்காக அவளிடம் நீ கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று. "அந்தப் படம் எனக்கு ஒரு பார்வை அனுபத்தைக் கொடுத்தது, அதை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு வாழ்க்கைத்துணையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நல்லது தானே?" என்றான்.

"உனக்கு அவளிடம் க்ரே கார்டன் பற்றிப் பேச வேண்டும், இந்தியா ஏன் மிக் விமானங்களை வைத்துக் கொன்று மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும், தி.ஜாவின் கும்பகோணத்தை அவளுடன் காலரா நடந்து அனுபவிக்க வென்றும் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பிருக்கிறது. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஃபைட் கிளப் பற்றி மூன்று மணி நேரம் பேசுவதை விட, உன்னுடன் பீச்சில் மிளகாய் பச்சி சாப்பிடுவது அவளுக்கு பிடித்ததாக இருக்கலாம்.

இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு உயர்வாகப் படுவது, அவளுக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், உன்னுடைய எதிர்பார்ப்புகள் காலத்துக்கும் மாறாதவை என்று சொல்ல முடியுமா? நேற்று பால குமாரனைப் போல் உலகில் யாரும் எழுத முடியாது என்று சொன்னாய். இன்று கரிச்சான் குஞ்சு என்கிறாய். உன் சிந்தனைத்தளம் நகரும்போதேல்லாம், அவளுடையதும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?

சரி இப்படி எடுத்துக்கொள், நீ பாலகுமாரன் பற்றி பேசும்போது, "ச்சீ கருமம்" என்று சொல்லி அவள் "மார்க்குவெஸ், யோசா ரேஞ்சில் இருக்கும் எனக்கு, இவன் ஒத்துவருவானா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் இவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டை வைத்து அவரைக் காதலிக்கவோ, நண்பராக்கிக் கொள்ளவோ முடியாது. மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீ எவ்வளவு வாசித்தாலும், சிந்தித்தாலும் பிரயோஜனமே இல்லை" என்றேன்.

இந்த உரையாடலை ஏனோ ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்யத் தோன்றியது. "நீங்கள் இலக்கியவாசகராகவும், யோசிப்பவராகவும் இருந்தால், வாழ்நாளில் சுவாரசியமான நான்கைந்து இந்தியப் பெண்களைக் கூட சந்திக்கப் போவதில்லை" என்கிறார். பாவமாக இருக்கிறது. அவரை நினைத்து அல்ல, அவரைச் சந்தித்த அந்தப் பெண்களை நினைத்து. ஒரு பெண்ணை சுவாரசியமாக பேசவைக்கக் கூடத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டு என்ன கஷ்டப்பட்டார்களோ, தெரியவில்லை.