Tuesday, 10 February 2015

"ஒரு நல்ல வாசகன் எப்போதும் எழுத்தாளனுக்கு கடிதம் எழுத மாட்டான்" என்று சுஜாதா அடிக்கடி குறிப்பிடுவார். உண்மையில், ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் எழுத்து மட்டுமே தொர்புச் சாதனமாக இருக்க வேண்டும். வாசகன் தான் எழுதுவதில்லையே என்கிறீர்களா? வாசகனுக்காகவும் சேர்த்து எழுதுபவனே எழுத்தாளன்.  நூலை அறிமுகப்படுத்த ஒரு விழா, விமர்சிக்க ஒரு இலக்கிய நிகழ்வு, வெளியே எங்காவது பார்த்தால் ஒரு நலம் விசாரிப்பு இத்துடன் நிறுத்திக்கொள்வது இருவருக்குமே நல்லது.

இதைத்தாண்டி, ஒரு எழுத்தாளனுடன் உரையாடத் தொடங்கும்போதோ, சேர்ந்து ஒரு கோப்பை தேநீரோ, சிகரெட்டோ, ஒயினோ பருகும்போதோ, ஒரு வாசகன் என்ற நிலையைத்தாண்டி, நண்பன் என்கிற வட்டத்துக்குள் நாமாகவே நுழைந்துவிடுகிறோம். வெகு சிலரால் மட்டுமே நண்பன், வாசகன் என்ற இரண்டையம் சமநிலைப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அந்த பக்குவம் இருப்பவர்கள், எந்த எழுத்தாளனையும் நெருங்குவதில்லை.

நம்முடைய நண்பனாக இருந்த ஒருவர் எழுத்தாளர் ஆகும்போது ஏற்ப்படும் உறவுக்கும், ஒரு எழுத்தாளனை வாசகனாக அணுகி, அதன் பிறகு நண்பனாவதற்கும் உள்ள உறவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாவதில், வாசிப்பின் மூலம் நமது மனதில் கட்டமைந்த எழுத்தாளனின் நட்சத்திர பிம்பத்தை, எவ்வளவு நெருங்கிய நண்பனானாலும் கடந்து செல்ல முடியாது. எழுத்தாளன் ஏதோ ஒரு இடத்தில் நமது பெயரை உச்சரித்தாலே, புளகாங்கிதம் அடைந்து முடியெல்லாம் நட்டுக்கொள்ளும். இந்த நட்சத்திர பிம்பத்தின் செல்வாக்கானது, நண்பன் என்கிற நிலையத்தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக ரசிகன், குரு, தந்தை, அண்ணன் என்றெல்லாம் சென்று விடும். இப்படி செல்வதால் இரண்டு பாதிப்புகள், முதலில் நம்மால் ஒரு கறாரான வாசகனாக இருக்க முடியாது. இரண்டாவது விஷயம் அந்த எழுத்தாளனின் கறாரான வாசகர்கள் சொல்லும் குறைகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, நாம் எப்படி அவரை ஒரு குருவாகவோ, ஆதர்ச நட்சத்திரமாகவோ, தந்தையாகவோ பாவிக்கிறோமோ, அப்படியே மற்றவர்களும் செய்ய வேண்டும், என்ற ஆசை வந்துவிடும்.

இதை விட முக்கியம், அந்த எழுத்தாளனை நம்மால் கடந்து போகவே முடியாது. தொடர்ந்து அந்த எழுத்தாளனின் influence நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை சிதைத்துக் கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஜெயமோகன் புத்தகங்களையும், அவருடைய கட்டுரைகளையும் படித்துக்கொண்டே இருந்தால் அவர் சொல்வது எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படியாகத் தோன்றும். எதிர்வினை ஆற்றினாலும், அதற்கேற்றார்போல பதில் சொல்லி உங்களை அவர் பக்கம் கொண்டு வந்து விடுவார். அவருடிய influence பவர் அப்படி. அப்படி ஏதேனும் தோன்றினால், உடனே ஒரு ஆறு மாதம் அந்தப்பக்கமே போகாமல் இருந்துவிட வேண்டும். அது தான் நம்முடைய சிந்திக்கும் ஆற்றலைக் காப்பாற்றும். ஒரு வாசகனாக மட்டும் இருக்கும்போது இப்படி தப்பிப்பது நிச்சயம் சாத்தியம், ஆனால் ஒரு ரசிகன், சீடன், மகன் என்ற நிலைமைக்கு போன பிறகு நிச்சயம் இதற்கு வாய்ப்பே இல்லை.

எப்பொழுது உங்களின் சுயசிந்தனைத்திறன் பாதிக்கப் படுகிறதோ, அதற்கு மேல் நீங்கள் என்ன வாசித்தும் எந்தப் பயனும் இல்லை. இலக்கிய சவமாகிவிடுகிறீர்கள்.

No comments:

Post a Comment