Monday, 25 May 2015

அக்ரி, பயோ- டெக்னாலஜி, மரைன் & இன்னபிற

பனிரெண்டாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவிகளிடம் பேசினேன். இருவருக்கும் நல்ல கட் -ஆஃப் மதிப்பெண்கள். இருவரும் திருச்சி மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற இரண்டு பள்ளிகளில் படித்தவர்கள். ஆனால் சொந்த ஊர், திருச்சியின் இரண்டு மூலைகளில் உள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டேன், இருவரும் சொன்னது "எஞ்சினியரிங்க்கு இப்போ வேல்யூ இல்லை, படிச்ச நெறய பேருக்கு வேலை இல்லை. அக்ரி, பயோ டெக்னாலஜி இல்லைனா பி.டி. எஸ் படிக்கலாம்".

கொஞ்சம் பொறுமையாகவே அவர்களிடம் கேட்டேன், "சரி அக்ரி படிச்சா எங்கே வேலை கிடைக்கும்? அக்ரியில் என்ன படிக்கப் போற?". அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவர்கள் தோழிகளுக்குள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்பது மட்டும், ஊரில் கடந்த சில ஆண்டுகளில் எஞ்சினியரிங் படித்துவிட்டு சும்மா இருப்பவர்களைப் பார்த்து உறுதி செய்ப்பப் பட்டிருக்கிறது. இவர்களுடைய மதிப்பெண்ணிற்கு அரசு / அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும்.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருந்த நலம் விரும்பிகள் நான் எஞ்சினியரிங் சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், நான் தெளிவாகத்தான் இருந்தேன். கல்விக்கடன் கிடைக்கும் என்று நம்பினாலும் பயத்துடன் பெற்றோரும் சம்மதித்திருந்தனர். எனக்கு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெரிய கனவு. அதில் சீட்டே கிடைக்காது என்று என்னுடைய பள்ளி முன்னோர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய மதிப்பெண்ணிற்கு தமிழகத்தின் முக்கியமான அரசு உதவிபெறும் கல்லூரியில் (மதுரை)  சீட் இருந்தது. மறுநாள் காலை கவுன்சிலிங். ஆனால் எனக்கு திருச்சி கல்லூரியில் படிக்கத்தான் விருப்பம். என்ஐடியில் எங்களுக்கு வழிகாட்டிய ஒரு அண்ணனிடம் நம்பர் வாங்கி வைத்திருந்தேன்.

இரவு அவரிடம் போன் செய்து கேட்டேன்," திருச்சியிலேயே படிக்கவா?" என்று. அவர் கெட்ட வார்த்தையில் திட்டாத குறை தான். ஒரு வழியாக அரை மனதுடன் தான் மதுரையில் சேர தேர்வு செய்துவிட்டு வந்தேன். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. அந்த வயதில், நான் வளர்ந்த சூழலில் என்னுடைய மெச்சூரிட்டி அவ்வளவு தான். வளரும் சூழலில் எது தொடர்ந்து சொல்லப்பட்டு மனதில் பதிய வைக்கப் படுகிறதோ, அதை மீறிய ஒரு முடிவை எடுப்பதற்கு கடினமாக இருக்கும். இந்த மாணவிகளின் சூழலை, திருச்சி போன்ற இரண்டாம் தர நகரத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் சூழலாக எடுத்துக்கொள்வோம்.

எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று தொடர்ந்து சூழலில் பதிய வைக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது உயர்தட்டு மாணவர்கள் அல்ல. பெருமைக்காக படிக்க வைப்பவர்களும், படித்த பெற்றோகளும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு அடிமட்டத்தில் இருந்தோ, நடுத்தர குடும்பங்களில் இருந்தோ முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்களிடம் இது எத்தகைய பயத்தை உருவாக்கும் என்பதை யோசிக்க வேண்டும். நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாலும், கடன் வாங்கி ஒருவன் அந்த நிலையில் இருந்து படிக்க வரும்போது, எந்த விதமான நம்பிக்கையை இது கொடுக்கும்? 90% வேலை வாய்ப்பு கிடைக்கும் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்தால் கூட, அதற்காக சக மாணவனுடன் போட்டியிட வேண்டும் என்ற சூழலில், தமிழ் வழியில் படித்த ஒரு கிராமப்புற மாணவனுக்கு வேலை கிடைக்காதோ என்ற பயம் ஏற்ப்படுத்தும் மன உளைச்சல் எத்தகையது, என்று யோசிக்கிறோமா?

கல்வி வழிகாட்டிகள் என்று கல்லூரிகளுடன் கூடு சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், பயோ-டேக், மரைன், ஃபேஷன் டேக் என்றெல்லாம் மாணவர்களுக்கு கலர் கலர் கனவுகளை மட்டும் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் பிரகாசமான வேலை என்பார்கள். நிகழ்காலத்தில் இந்தத் துறைகளில் எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றன என்பது யாறுக்கும் தெரியாது. இவற்றுடன் ஒப்பிட்டால் மெயின் ஸ்ட்ரீம் என்று சொல்லக் கூடிய வழக்கமான எஞ்சினியரின் படிப்புகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.

மாணவர்களே சில நேரம் ஒத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் "எதுக்குடா இந்த ஆறாயிரத்துக்கு இப்படி கஷ்டப் படுற?" என்று அனுப்புவதில்லை. முக்கியமாக வெளி மாநிலங்களில், சைட் வேலை என்று சொல்லப்படும் வேலைகளுக்கு செல்வதை நம் ஆட்கள் முடிந்த அளவு தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்த ஊதியம் என்பதோ, வெளியூரில் வேலை என்பதோ வாழ்கையின் முடிவு அல்ல. அது ஒரு தொடக்கம். என்னுடைய முதல் சம்பளம், இன்று ஆறு மடங்காக ஆகியிருக்கிறது.

மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் சராசரி ஊதியம் பெறுவதற்கே ஏதாவது ஒரு கட்டத்தில் கஷ்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று பள்ளியில் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் கஷ்டப்பட்டு வேலைவாய்ப்புக்குத் தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வெளியில் குறைந்த ஊழியத்தில் ஒரு துறையில் நுழைந்து கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதில் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும். போட்டி அதிகமாகிவிட்ட சூழலில் எந்தத் துறையிலும் எளிதில் வேலைவாய்ப்போ, அதிக ஊதியமோ கிடைக்காது. அதே போலத்தான் பொறியியல் துறையும். விரும்பிப் படிப்பவர்களுக்கும், இது தான் தன் குடும்பத்தை சமூக பொருளாதார நிலைகளில் உயர்த்தும் என்று முனைப்புடன் படிப்பவர்களுக்கும் தாராளமாக வேலை கிடைக்கும்.


Monday, 18 May 2015

ஷாப்பிங்

தோழிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஒரு கடையில் சில மணி நேரங்கள் தேடி, கடைசியாக ஒரு கருப்பு சுடிதார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்திருந்தது. "நல்லா இருக்கு, எடுத்துக்கோ" என்றேன். "இது இருக்கட்டும், அந்த லைனையும் பார்க்கலாம்" என்றால். அந்த வரிசையைப் பார்த்து முடித்து வரும்போது, அந்த கறுப்புச் சுடிதாரை இன்னொரு பெண் தனக்கு வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அப்பாவும் அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிட்டதால், நேரடியாக பில் போடா எடுத்துச் சென்று விட்டனர்.

இதைப் பார்த்ததும் தோழிக்கு வந்த கோபத்திற்கு, கடையில் எதுவும் கலவரம் வந்துவிடாமல் இருக்க, எல்லாத் திட்டையும் நானே வாங்கிக் கொண்டு, சரி வா வேற பார்க்கலாம் என்றேன். "வெட்டியா தானே இருக்க, அதை எடுத்து கையில வச்சிருக்கலாம்ல?" என்று திட்டிக் கொண்டே பார்க்க மனமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அந்த நேரத்தில் சேல்ஸ்மேன் புண்ணியவான் அதே மாடல் கருப்பு சுடிதாரில் இரண்டு பீஸ்களைக் கொண்டுவந்து லைனில் வைத்தார். "கடவுள் இருக்கான் கொமாரு" என்று நினைத்துக் கொண்டே அவளிடம் அதைக் காட்டி, வா போய் எடுக்கலாம் என்றேன். முறைத்துவிட்டு " அந்த பொண்ணு எடுத்த அதே சுடிதாரை எல்லாம் என்னால எடுக்க முடியாது, வேற பார்க்கலாம்" என்று அவள் சொன்னபோது, லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது.

மறுபடியும் லைன்-1 இல் ஆரம்பித்து லைன்-3 இல் வரும்போது, ஒரு சுடிதாரை ஆர்வமாக எடுத்து அவள் மேல் வைத்துக் காட்டி நல்லா இருக்கா என்றாள். ஆஹா முடியப் போகுது என்ற சந்தோஷத்தில், அருமையா இருக்கு, இந்தக் கலர் தான் சூப்பரா வித்தியாசமா இருக்கு என்றேன். ஸ்கூலில் அத்தனை நாடகங்கள் நடித்தும் கடைசியில் எதுவம் கை கொடுக்கவில்லை. எப்படியோ கண்டுபிடித்துவிட்டு வேண்டாம் என்றாள். ராஜதந்திரங்கள் வீணாகப் போன சோகத்தில் சரி வா அடுத்து பார்க்கலாம் என்றேன். அதையே கையில் வைத்துக் கொண்டே இருந்தாள், "பிடிச்சிருந்தா எடு" என்றேன்.

 பக்கத்தில் கூப்பிட்டு "நமக்குப் முன்னாடி ஒரு அம்மாவும் பொண்ணும் நிக்கிறாங்களா?" என்றாள். பார்த்தேன். "நான் இதை எடுத்து வச்சுப் பார்க்கும்போது, அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட இந்த சுடிதாரைக் காட்டி நல்லா இருக்குல்லன்னு கேட்டுச்சு, அந்த அம்மாவும் தலையாட்டுச்சு, இப்பவும் அவங்க இதையே தான் பார்த்துகிட்டு இருக்காங்க பாரு" என்றாள். "சரி வச்சுட்டு வா, அவங்க எடுக்கட்டும்" என்றேன். "அதெப்படி அப்படியே விட முடியும்.. கொஞ்ச நேரம் அவங்களை கடுப்பேத்தலாம்." என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு கையிலேயே வைத்திருந்தாள். இவள் வைத்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் வந்து எடுக்கிறார்களா என்பதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.

தலை சுற்றலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அடுத்து எங்கே என்றேன். போத்தீஸ். ரெடிமேட் லைன் 1-5, மட்டீரியல் லைன் 1- 8 என்று சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தது. இடையிடையில் இது எப்படி இருக்கு என்று எதையாவது காட்டுவதும், கேவலமா இருக்கு என்ற பதிலில் கடையில் ஒரு பல்ப் கூடுவதுமாக இருந்தது. ஒரு வழியாக ஒரு மஞ்சள் சுடிதாரை எடுத்து சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொன்னாள். அந்தப் பக்கம் போன இன்னொரு பெண் அதை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே போனாள். என்னிடம் வந்து "இப்போ பாரு அந்த பொண்ணு மஞ்சள் கலரையா தேடுவாள்" என்று கிசுகிசுத்தாள். ஆச்சர்யமாக அவளும் அப்படியே செய்துகொண்டிருந்தாள். "சரி எடுத்தாச்சுல்ல, வா போகலாம்" என்றேன். "நமக்கு மஞ்சள் வேண்டாம், பச்சையில் பார்க்கலாம்" என்று சொன்னபோது அப்படியே கண்கள் சொருகி இரு வரேன் என்று நகர்ந்தேன். கொஞ்சம் உட்காரலாம் என்று சேர்கள் போட்டிருக்கும் பகுதிக்குச் சென்றால், எல்லா இருக்கைகளையும் அடைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

Wednesday, 13 May 2015

"காந்தியை ஏமாற்றி வரும் இந்தியா" என்ற தலைப்பில் திரு மு. இராமனாதன் தமிழ் இந்துவில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருக்கிறார். ஹாங்காங் புறநகர் பகுதி மோனோ ரயிலில் இவர் பயணித்த போது, மெட்ரோ ரயில்களைப் போல டிக்கெட் இருந்தால் தான் திறக்கும் தானியங்கி கதவுகள் இல்லாமல் இருந்த போதும், எல்லோரும் முறையாக டிக்கெட் எடுத்து பயணித்ததைப் பார்த்து ஆச்சர்யமடந்திருக்கிறார். தன்னுடன் வந்தவரிடம், "இது எப்படி சாத்தியமானது?" என்று கேட்டபோது, அவர் "நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் எனபதை  பள்ளியிலேயே பழக்கிவிடுகிறோம்" என்றாராம்.

"காந்தி விடுதலைப் போராட்டத்திற்காக சட்டத்தை மீறினாலும், மற்ற விஷயங்களில் எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே விரும்பினார். ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை ஏன் பள்ளியிலேயே நாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை?" என்று வருத்தப்படுகிறார். தான் பார்த்த சில உதாரணங்களைக் குறிப்பிட்டு, சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தால் இளைஞர்கள் இப்படி ஆகியிருக்க மாட்டார்கள் என்கிறார்.

காந்தி சொன்னபடி சட்டத்தை மதிப்பதை பள்ளிகள் போதிக்கின்றனவா என்பதை பின்னால் பார்க்கலாம். முதலில் காந்தியைப் பற்றி பள்ளிகள் என்ன சொல்லித்தருகின்றன என்பதைப் பார்ப்போம். பாடத்திட்டம், பேச்சுப்போட்டி, ஆண்டுவிழா இவற்றிலெல்லாம் காந்தியும் அஹிம்சையும் முன்னிறுத்தப் படுகின்றன. ஆனால் மாணவர்களுடன் நேரடியாக உரையாடும் ஆசிரியர்களுக்கு காந்தியின் மேலுள்ள அபிப்பிராயம் என்ன? உண்மையில் சரி பாதி ஆசிரியர்களுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை. அதிலும் சில பேருக்கு காந்தி என்றாலே ஆகாது. ,

"காந்தி ஒரு அயோக்கியன், ஏமாற்றுக்காரன், ("ன்" தான் "ர்" அல்ல) தேச துரோகி, சுயநலவாதி, பொம்பளை பொருக்கி, காந்தியால் தான் சுதந்திரம் தாமதமானது, சண்டையிட்டிருந்தால் வெள்ளைக்காரன் அப்பவே ஓடியிருப்பான், கோட்சே தான் உண்மையான தேச பக்தன்" இப்படி எல்லாம் ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு சொல்லித் தருவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு ஆசிரியர் அல்ல, பலர் இதையே செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை அரிதாகவே ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் இதை அப்படியே நம்பி ஏற்கிறார்கள்.

"உலகமே உத்தமர் என்று சொல்பவரைப் பற்றிய ரகசிய உண்மைகள் எனக்குத் தெரியும், நல்லவேளை என் ஆசிரியர் உண்மையைச் சொன்னதால் அந்த ஆளைப் பற்றி தெரிந்தது, இல்லையென்றால் உன்னைப் போல நானும் அவனை தேசத்தந்தை என்று நம்பியிருப்பேன்" என்ற மனநிலையில் நிறைய மாணவர்கள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு வேறு என்ன மனமுதிர்ச்சி இருக்கக்கூடும். ஒருமுறை இப்படி மனதில் பதிய வைக்கப்பட்டபின் அதை மாற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது.

ஒரு பக்கம் நேதாஜி வெறியர்கள், சில ஜாதி அமைப்பில் மூழ்கிப் போனவர்கள், இன்னொரு பக்கம் அம்பேத்காரை புறக்கணித்தார் காந்தி என்ற ஆதங்கத்தில் இன்னொரு ஜாதி ஆட்கள், இன்னொரு பக்கம் இப்படி  அரைகுறையாக கேள்விப்பட்டு, அரைகுறையாகவே பயின்ற ஆசிரியர்கள். இன்னும் சில பேருக்கு அஹிம்சை, சத்தியாகிரகம் என்பதெல்லாம் ஒரு நடக்கவியலாத சமாச்சாரமாகத் தெரிகிறது. அதெல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை, இரண்டாம் உலகப் போரால் இங்கிலாந்து நலிவடைந்து இருந்தது, அதனால் அவர்கள் வெளியேறினார்கள். புகழை எல்லாம் காந்தி எடுத்துக்கொண்டார் என்பார்கள்.

அஹிம்சை என்பது ஒரு ஆச்சர்யமான, நிகழ வாய்ப்பே இல்லாத விஷயம் தான். இத்தனை கோடி வருடங்களாக பூமியில் இருந்துவரும் உயிரினங்களின் அடிப்படை இயல்புக்கு எதிரானது. எந்த உயிரினமும், தன்னை ஒரு வலிமையான எதிரி தாக்கும்போது, முடிந்த அளவு போராடித்தான் சரணடையும். அஹிம்சை முறையில் எந்த விலங்குடனும் போராட முடியாது, மனிதனைத் தவிர. ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட அறவழி அஹிம்சைப் போராட்டத்திற்கு, தைரியம், மன முதிர்ச்சி, ஒற்றுமை வேண்டும். இத்தனை கோடி ஆண்டு வரலாற்றுக்கு எதிராக, இவ்வளவு பெரிய தேசத்தில் மக்களை ஒருங்கிணைத்து காந்தி அதை சாதித்தற்காகத்தான் உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

அவருக்கும் சில குறைகள் இருந்ததன. அதை அவர் பொதுவில் வைத்தார். உங்களுக்கோ எனக்கோ அந்த தைரியம் இல்லை, நாம் ஒருவேளை ஒரு குழந்தையை வன்புணர்வு செய்திருப்போம், நண்பன் நாசகாகப் போக வேண்டும் என்று வேண்டியிருப்போம். சந்தப்பம் கிடைத்தால் யாரையாவது கொலை செய்யலாம் என்று எண்ணியிருப்போம். ஆனால், இதையெல்லாம் வசதியாக மறந்தோ மறுத்தோ விடுவோம். ஒருவேளை காந்தியைப் போல நாமும் சுய பரிசோதனை செய்துகொண்டிருந்தால் யார் அயோக்கியன் என்று தெரியவரும்.