கல்லூரி ப்ராஜெக்டுக்காக ஐ.சி.எஃப் இல் இருந்த போது, SSE எனும் சீனியர் செக்ஷன் எஞ்சினியர் ஒரு நாள் எங்களைக் கூப்பிட்டு "அங்க கூட்டுறதுக்கு வந்திருக்காளே ஒரு பொம்பளை, அவளை இந்த 20 நாள்ல என்னிக்காச்சும் பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில்லை. "இருபது நாள் கழிச்சு இப்போ தான் வரா, ஏன்னு என்னால கேட்க முடியாது. கேட்டால், நான் பக்கத்து ஷாப்புக்கு போறதுக்குள்ளே என்னை ஆள் வச்சு வெட்டிடுவா" என்றார்.
இந்தியாவில் இரண்டுவிதமான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று நீங்கள் என்ன செய்தாலும், உங்களை வேலையை விட்டு தூக்க முடியாத நிறுவனம், இரண்டாவது அவர்கள் எப்போது நினைத்தாலும் உங்களை வேலையிலிருந்து தூக்கலாம் என்ற நிறுவனம். வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. முதல் வகையில் பெரும்பாலான, அரசு நிறுவனங்களும், ஒரு சில பழைய தனியார் நிறுவனங்களும், வெகு சில நியாயஸ்தர்கள் நடத்தும் நிறுவங்களும் அடங்கும். உட்கார்ந்து குண்டி தேய்க்கும் வேலை என்று ஒரு காலத்தில் இதைச் சொல்வார்கள். பொண்ணு கொடுக்கும்போது மாமனாரின் முதல் சாய்ஸ் இந்த வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்குத் தான்.
தனியார் நிறுவனங்களில் சம்பளம் கொஞ்சம் அதிகம் கிடைக்கத் தொடங்கியபோது, ஸ்திரத் தன்மை என்பதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு நிறைய பேர் இந்தப் பக்கம் வரத் தொடங்கினார்கள். அரசு வேலை கிடைப்பதில் இருக்கும் ஒளிவு மறைவு சமாச்சாரங்களும் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தாலும் இன்டர்வியுவ் என்ற பெயரில் பணம் கறக்கிறார்கள், அதற்கு இதுவே பரவாயில்லை என்ற மனநிலையில் கொஞ்சம் பயமிருந்தாலும் தனியார் வேலையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
நண்பனுடைய அப்பா ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்தார். அவனிடம் சொல்லிக்கொண்டே இருப்பார், "எப்போ வேணும்னாலும் என்னை வேலையை விட்டு தூக்குவாங்க, நீ உன்னோட வாழக்கையை பாத்துக்க ஒழுங்கா படி" என்று. அவனும் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் வேலைக்கு சேர்ந்தான். ஆனால் நிச்சயம் அவன் அப்பா அளவுக்கு அவனுக்கு பயமில்லை. ஏனென்றால் பழகிவிட்டது. அரசு வேலைகள் எல்லாம் இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாக நிரப்பப் பட்டாலும், மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அரசு வேலைக்கு தேர்வு செய்யப் படுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். வேலை வேண்டும் என்றால், தனியார் தான் ஒரே வழி. வருடக் கணக்கில், பயிற்சி மையங்களுக்கு சென்று, அரசுத் தேர்வுக்குத் தயாராகும் கொடுப்பினை நிறைய பேருக்கு வாய்ப்பதும் இல்லை.
உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயம் இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கச் செய்வது தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம் தான். அதிலும், எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. நம் ஊரில் குறைந்த பட்ச ஊதியமென்ற கணக்கெல்லாம் இல்லை. அந்த நிறுவனத்தில் அவ்வளவு தருகிறார்களே என்றெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், அங்கேயே போய்க்கோ என்று பதில் வரும். கொஞ்சம் அதிகமாக சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் ஐடி தான் அதிகம் கவனிக்கப் படுகிறது. அதிக சம்பளம் என்பதால் மட்டுமல்ல, வேலைவாப்பு எண்ணிக்கையும் ஐடியில் அதிகம் என்பதால்தான் கவனம் பெறுகிறது.
உதாரணத்துக்கு பவர் செக்டாரை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் எப்படி கணக்கிட்டாலும் இதில் இருக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டாது. ஐடி துறையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். ஆட்குறைப்பு என்பது எல்லா தனியார் நிறுவனங்களிலும், எல்லா துறைகளிலும் எப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட, அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று நாம் நம்பும் ஒரு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் இப்படி ஆட்குறைப்பில் ஈடுபடும்போது எல்லோரும் அதிர்ச்சியாகிரார்கள்.
ஐடி ஊழியர்களால் தான் நாடே சீரழிகின்றது என்று சொல்லிக் கொண்டிருந்த இதே சமுதாயம் தான், இன்று இவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. உண்மையில் அக்கறையில் தான் கவலைப்படுகிறார்களா அல்லது நடிக்கிறார்களா என்றே
புரியவில்லை. சரி எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்த அக்கறையால் பொறியாளர்கள் மாதிரியான உயர் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் (வார்த்தை உபயம் - ஜெமோ), தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. யார் இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் இந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தான். உள்ளே இருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிற்சங்கம் அமைந்தால் எல்லாரும் சேருவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஒற்றுமை நிச்சயம் இருக்காது. ஐடியில் மட்டுமல்ல, பொதுவாகவே பொறியாளர்களிடம் ஒற்றுமை இருக்காது. சக professional களான, மருத்துவர்களிடமும், வக்கீல்களிடமும் இருக்கும் ஒற்றுமையில் ஒரு பத்து சதவீதம் கூட பொறியாளர்களிடம் கிடையாது. இதற்கு முதல் காரணமாக இருப்பது எண்ணிக்கை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவருக்கு மதுரையில் பத்து மருத்துவர்களைத் தெரியுமா என்று கேட்டால், தெரியும். ஆனால் என்னுடைய அலுவலகத்தில் 2 வது தளத்தில் இருக்கும் எனக்கு, இந்தத் தளத்திலேயே முக்கால்வாசி பேரைத் தெரியாது. இப்படி ஒருங்கிணைக்கவே முடியாத ஒரு பெருங்கூட்டம் இருப்பது, முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. சரி, எப்படி இதை ஒருங்கிணைக்கவே முடியாத கூட்டம் என்கிறேன் என்று கேட்கிறீர்களா? தனியார் நிறுவனங்களிலும், கார்பரேட்டுகளிலும், சக ஊழியர்களுடன் போட்டி போடுவதை ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக்கிவிட்டார்கள். வெகு சில நிறுவனங்கள் மட்டும்தான் இதற்கு விதி விலக்கு.
அரசு வேலைகளில் இருப்பது போல, இத்தனை வருட அனுபவத்துக்கு இவ்வளவு சம்பளம் என்ற பேச்சே கிடையாது. ஒவ்வொரு வருடமும் அப்ரைசல் நடக்கும். (அல்லது நடந்து போல காண்பிக்கப்படும்). அதில் ஒருவருக்கு அதிக ஊதிய உயர்வும், இன்னொருவருக்கு குறைவாகவும், ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போகும். இதை யார் முடிவு செய்வார்கள் என்றால், ஒருவருடைய immediate boss /மேனேஜர் அல்லது டீம் லீடர். அதிலும் பார்த்தால், ஒரு மேனேஜர் இரக்க குணம் படைத்தவராக இருக்கும்பட்சத்தில் கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்க வழி உண்டு. அல்லது உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் அதன் மூலம் பலன்பெறவும் முடியும். அவருக்கு உங்களைப் பிடிக்காவிட்டால் மொத்தமும் காலி. காராறன ஆட்கள் சில பேர் தான் இருப்பார்கள். நானும் தான் அந்த அளவு கம்பெனிக்காக உழைத்தேன் என்று நீங்கள் சண்டையும் போட முடியாது. ஊதிய உயர்வுக் கடிதம் என்பதே confidential சமாச்சாரம் என்று முத்திரை குத்தப்பட்டு தான் வரும்.
உடன் இருக்கும் ஊழியர்களிடமே இப்படி ஒரு போட்டியை உருவாக்கி விட்டிருக்கும்போது, அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமலும் நிற்கும் போது, தொழிற்சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினால், எத்தனை பேர் அதில் சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் எல்லாம் இப்படி நிரந்தரமான பணிச் சூழல் இருக்கும் அரசு நிறுவனங்களில் அல்லது மிகவும் பழைய தனியார் நிறுவனங்களிலும் தான் செயல்படமுடியும். கார்பரேட்டுகளில் வேலைக்கு சேரும்போதே, "எங்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே நீங்கள் இங்கே பணியில் இருக்க முடியும்" என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் சேர்ப்பார்கள். அதுவுமில்லாமல், வேலை நிறுத்தம் என்ற ஒன்றை எல்லாம் அலுவலகங்களில் நடத்த முடியாது. அது மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம், ஒரு தொழிற்சாலை, அதனுள் சில இயந்திரங்கள் இருக்கும் அமைப்புக்குத்தான் ஒத்து வரும். அலுவலகத்தில் தொழிற்சங்கங்கள் கதவை மூடி போராட்டம் நடத்த முடியாது. கதவை மூடினால், வீட்டில் இருந்து கூட வேலை நடக்கும். நீங்கள் இல்லையென்றால், அந்த வேலையை கொத்திக்கொண்டு போக ஆயிரம் பேர் இருக்கும் சூழலில் உங்கள் மேனேஜர் வேலையை முடி என்றால் முடித்து தான் ஆக வேண்டும்.
வேலையை விட்டு தூக்காமல் சம்பளத்தைக் குறைப்பது, வசதிகளைக் குறைப்பது, மூன்று மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் தருவது இப்படி எல்லாம் கூட மறைமுகமாக நிறுவனங்களால் கொள்ளையடிக்க முடியும். எவ்வளவு தொழிற் சங்கங்கள் வைத்தாலும் சட்ட ரீதியாக ஒன்னும் கிழிக்க முடியாது. ஏன் புகார் கூட தெரிவிக்க முடியாது. என்னுடைய பழைய இரண்டு நிறுவனங்களில் இருந்தே எனக்கு இப்படி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வர வேண்டி இருக்கிறது. பலருக்கு எத்தனையோ லட்சங்கள், கோடிகள். ஆனால் சட்ட ரீதியில் எங்கும் போராட முடியாது. சம்பளம் தரவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் மாதிரி, மறியலில் எல்லாம் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைக்க முடியாது.
உருப்படியான தீர்வு ஏதாவது கிடைக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால் மட்டுமே முடியும். வருடந்தோறும் பொறியியல் முடித்து வெளிவரும், ஒரு பெரும்கூட்டத்தையும், ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் கூட்டத்தையும், பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசிடம் இருந்து கொஞ்சம் தெளிவான தொலைநோக்குள்ள திட்டங்கள் வேண்டும். முதலாளிகளின் தேவையை விட ஆட்கள் குறைவாகக் கிடைக்கும்போது, முதலாளித்துவத்தின் பிடி தானாகவே தளரும்.
எதற்கும் சுஜாதாவின் "மண்ணின் மைந்தர்கள்" குறுநாவலை ஒரு முறை படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன். எந்தத் தொகுப்பில் இருக்கிறதென்று தெரியவில்லை.