Monday, 5 January 2015

இலக்கியவாதிகள் செய்யும் பல விஷயங்கள் இன்னும் எனக்கு சரியாகப் புரிவதே இல்லை. எக்சைல் வெளியீட்டுக்கு எதற்காக நெல்சன் சேவியர் அழைக்கப் பட்டார் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. ஒரு வளர்ந்து வரும் ஊடகவியலாளராக (வளர்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்) நெல்சன் மேல் எனக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஆனால் ஒரு முன்னணி எழுத்தாளரின் நாவலை வெளியீட்டின் போது விமர்சித்துப் பேசுவதற்கு அவர் சரியான ஆள் தானா என்பதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் தான்.

ஜெயமோகன் இளையராஜாவை வைத்து புத்தக வெளியீடு நடத்தும்போது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று கேட்கலாம். சொல்லப் போனால், ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்தவர் என்ற ஒரே தகுதிக்காக (!!!!!) நீது சந்திராவை அழைக்கப் போகிறேன் என்று சாரு சொன்னதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் வேறு யாரையாவது அழைத்திருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.

ஒரு நாவலை விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு நாவலை விமர்சிக்க ஒரு வாசகனாக இருந்தால் மட்டும் போதும். உலக நாவல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தாரளமாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழகு சேர்ப்பது எது? அந்த நூலை முன்பே படித்து, ஆழமாக விமர்சிக்கும் ஒரு உரை தானே? நாலு பேர் அப்படி தீவிர விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது ஒருவர் கமர்ஷியலுக்காக இருக்கலாம். ஆனால் இங்கு நடப்பதோ தலைகீழ்.

கவுதம் மேனனையும், இளையராஜாவையும் பார்ப்பதற்காக வரும் ரசிகக் கூட்டங்களை விட, தீவிர வாசகர்கள் தான் ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அதிகம் வருகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. (எவ்வளவு பெரிய பிரபலம் வந்தாலும், இலக்கியக் கூட்டம் என்றால் தலைதெறிக்க ஓடுபவர்கள் தான் அதிகம்). இந்த தீவிர வாசகர்களுக்கும் சரி, எழுத்தாளருக்கும் சரி ஒரு நல்ல விமர்சன உரையை விட மகிழ்வான ஒன்று இருக்க முடியுமா? ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

காநாசு வுக்குப் பிறகு தமிழில் நல்ல விமர்சனங்களே வருவதில்லை என்று எழுத்தாளர்கள் புலம்புகிறார்கள். விமர்சிக்க வேண்டிய தமிழறிஞர்களோ சமகால இலக்கிய நிகழ்வுகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் இலக்கியம் பக்கம் போனாலும், "பாரதி படைப்புகளில் தேசியம்", "குடும்ப நாவல்களில் பெண்மையின் மாண்பு" என்ற வகையில் முனைவர் பட்டம் வாங்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சரி அப்போ, யார் விமர்சனம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்? எழுத்தாளர்கள் தானே செய்ய வேண்டும்? தங்கள் வெளியீட்டு விழாக்களில் கூட அப்படி ஒருவரை கண்டறிந்து விமர்சனம் செய்ய வைக்காமல், நாவலை வாசிக்காத  தருண் தேஜ்பாலையும், நண்பன் என்பதற்காக மிஷ்கினையும் வைத்து விழா நடத்தினால் நல்ல விமர்சகர்கள் எப்படி உருவாக முடியும்?

தீவிர விமர்சம் என்றால், டீ கூட குடிக்காத அந்த மாலைப் பசியிலும் தூங்க வைப்பதைப் போல சிலர் உரையாற்றுகிறார்கள். தினத்தந்தி சினிமா விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், படம் பார்க்காத ஒருவனை படம் பார்க்கத் தூண்டுவது போல் எப்படி எழுதுகிறார்கள்? அப்படி எழுதினாலோ, பேசினாலோ தானே நாவலை சராசரி மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்? அனால் தமிழ் இலக்கியச் சூலில் நடப்பது என்ன? ஒரு பக்கம் எளிமையாக எழுதும் அசோகமித்திரன் படைப்புகளை வாசிப்பது எப்படி என்று இரண்டு நாள் வகுப்பெடுக்கிராகள், இன்னொரு பக்கம் கமலையும் இளையராஜாவையும் நம்பி புத்தகம் விற்க இறங்குகிறார்கள். உண்மையில் இந்த celebrity பிம்பத்தை வைத்து ஒரு புத்தகம் கூட விற்க முடியாது என்பதை இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். கமலே guest appearance இல் நடித்தால் கூட, ரசிகனுக்கு பிடித்திருந்தால் தான் படத்துக்கே போவான். பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். சகலமும் சினிமா மயமான தமிழ் நாட்டில் சினிமாவுக்கே  இந்த நிலைமை என்றால் இலக்கியத்துக்கு சொல்லவா வேண்டும்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்  "காசு கொடுத்து குதிரை வாங்கலாம், ஆனால் கொள்ளு திங்க வைக்க முடியாது".

No comments:

Post a Comment