Tuesday, 20 January 2015

காதுகள்

இன்னமும் குழந்தை பிறந்தால் பின்னாளில் என்ன கலரில் இருப்பான் என்று தெரிந்துகொள்ள காதுகளையே பார்க்கின்றனர். சில சமூகங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே காது குத்தி விடுகிறார்கள். காது குத்து என்பது, ஒரு கல்யாணத்தை விட கோலாகலமான நிகழ்ச்சி. கல்யாணத்தைப் போல, தெரியாத இரண்டு குடும்ப சொந்தங்கள் எதிரெதிர் திசையில் நிற்காமல், எல்லாம் தெரிந்தவர்களாகவே சூழ்ந்திருக்கும் விழா. சொல்லப்போனால் நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே விழாவும் கூட.

ஆண்குழந்தைக்கு காது குத்தினாலும் மூன்று நாளைக்கு கழட்டக் கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால், நானெல்லாம் கம்மலுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். காது குத்தாமல் ஆண்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யக்கூடாது என்று வழக்கமும் இருப்பதால், திருமண மேடையிலேயே சாஸ்திரத்துக்காக காதுகுத்திக் கொண்டு தாலி கட்டியவர்களைப் பார்த்திருக்குறேன். மொட்டைக் காதோடு பெண் பிள்ளைகள் இருந்தால், தூர்ந்து விடுமென்று, குச்சி குத்தி விடுவார்கள். எந்தக் குழந்தையும் அப்படி அலைய விரும்புவதுமில்லை. காதுகுத்தும் முன்பே, பட்டன் தோடுகள் போட்டு பெரியவர்களாகிவிட்டதாக உணர்வார்கள். சிலருக்கு சரியான தோடு அமையாமல்,  காதுகள் சீழ் பிடித்தும்விடும். உள்ளதிலேயே கொடூரமான மணங்களில் காது சீழும் ஒன்று.

டைட்டானிக் மாட்டல்கள் பரவலாக இருந்த காலத்தில், அந்த மாட்டல்கள் பிரதிபலிக்கும் வண்ணங்களில் மின்னும் காதுகள் இன்னனும் அழகானவையாக உணரப்பட்டிருக்கின்றன. ஊக்கு, ஹேர்பின், பாய்க்குச்சி, பென்சில் என்று எது கிடைத்தாலும் காதுகுடையும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் கோழி இறகால் காது குடைவது தனி சுகம் தான். அதற்காக இறகைத் தேடி எடுத்து, நுனியை மட்டும் விட்டுவிட்டு மீதி இறகைக் கழித்துக் கொடுக்க அத்தைகளோ, சித்திகளோ வீட்டில் இருக்க வேண்டும். ஷீரடியில் அரை அடி நீள கம்பியைக் கையில் வைத்துக் கொண்டு காதில் இருந்து ஈ எடுக்கிறேன் என்று ஒருவர் கேட்டபோது, சிலிர்த்துக் கொள்ள காது மயிர்கள் தான் இல்லை எனக்கு.

அப்பாவுக்கும் எனக்கும் கணக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியருக்கு காதுக்கு வெளியே மயிர்கள் நீட்டியிருக்கும். ஜன்னல் வெளிச்சத்தில் அந்த மயிர்கள் மின்னுவதை பல நாட்கள் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். மனிதர்களை வரையும் போது காதுகள் தான் வரைவதற்கு எளிதானவை. எளிதாக ஒரு கேள்விக்குறியைப் போல முடித்துவிடலாம். விலங்குகளின் காதுகள் தான் கொஞ்சம் ஆச்சர்யமானவை. இவ்வளவு பெரிய யானையின் காதுக்குள் எறும்பு புகுந்தால் இறந்து விடும் என்று ரொம்ப நாட்கள் நம்பியிருக்கிறேன். யானையின் காதுகள் மாதிரி ஒரு extended surface இருந்தால் வெப்பக்கடத்தலை அதிகரிக்கலாம். அதை அறிவியலில் Fins  என்பார்கள். ஆமாம் மீன்களில் செவுல்கள்  மாதிரி தான். உண்மையில் மீன்களின் செவுல்கள் தான் அவற்றின் காதுகளோ என்று கூட யோசித்திருக்கிறேன் சின்ன வயதில். இன்னும் கூட பாம்புக்கு காது இல்லை என்பதை பலரால் நம்ப முடிவதில்லை.

நாயின் காதுகளை வைத்து, அவை என்ன மூடில் இருக்கின்ற என்று அறியலாம். மனிதனைப் போல காதைத் தடவிக் கொடுத்தால் நாய்களும் சுகமாக காட்டிக் கொண்டிருக்கும். ஆடுகளின் காதுக்குள் சேர்ந்திருக்கும் அழுக்கை துடைக்கும் போது வரும் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாத்துகளை கழுத்தைப் பிடித்து தூக்கச் சொன்னால் ஒரு பயம் வருவதைப் போலத்தான், முயல்களை காதைப் பிடித்து தூக்கச் சொன்னாலும் எனக்கு பயம் வரும். வலிக்குமே என்று. எத்தனை ஆசிரியர்கள் நம் காதைத் திருகியிருக்கிறார்கள்

பறவைகளுக்கு காது இருப்பதே தெரியாமல் இறகுகள் மூடியிருக்கும். கோழி பிடிக்கும்போது கையைக் கொண்டு தேவையே காதைக் கண்டுபிடிப்பது ஜாலியாக இருக்கும். பறவைகளில் வௌவாளுக்கும், விலங்குகளில் தேவாங்குக்கும் அழகான காதுகள் என்பது என்னுடைய கருத்து.

சுவற்றுக்கும் கூட காது உண்டு என்பார்கள். சில நேரம் காது குளிர கேட்க வேண்டும் என்றும் சொல்வார்கள். உண்மையில் காது தான் குளிரைத் தாங்க முடியாத உறுப்பு. நேரடியாக உடலுக்குள் குளிரைக் கடத்திவிடுகிறது. காதின் பின்னால் மூக்கையும், நுனி நாக்கையும் வைத்தால் உணர்ச்சி பொங்கும் என்பது தான் கலவியைப் பற்றி சீனியர்கள் சொல்லிக் கொடுத்த முதல் உருப்படியான விஷயம். வான்கோவின் காது என்ற சிறுகதையை உள்ளடக்கிய அதே பெயரிலான மொழி பெயர்ப்புப் புத்தகம் தமிழின் முக்கியான முயற்சி. மறுவாசிப்புக்காக தேடிக்கொண்டிருக்கிறேன். சாய்ந்து கொள்ள ஒரு மடி வேண்டும் என்று நண்பர் சொன்னதற்கு இன்னொரு நண்பர், "எனக்கு இரண்டு காதுகள் மட்டும் போதும்" என்றார். ஆம், காதுகள் தான் நம்மை பைத்தியமாகிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

No comments:

Post a Comment