Wednesday, 31 December 2014

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில புத்திசாலிகளில் எனக்கு பிரகாஷ்ராஜை அதிகம் பிடிக்கும். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், சில நேரங்களில் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர். அவருடைய சில கதாபத்திரங்களின் வசனங்களில் நான் அவருடைய சிந்தனையையே பார்ப்பதாகத் தோன்றும்.

அலிபாபா படத்தில் ஒரு வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது ஹீரோயினிடம் பிரகாஷ் ராஜும் அவர் மகனும் மாட்டிக் கொள்வார்கள். மகன் தப்பித்து ஓடலாம் என்று சொல்லும்போது, பிரகாஷ்ராஜ் நினாதமாக அந்தப் பெண்ணுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார். "எதை நீ தப்புன்னு சொல்ற? இந்த சரி தப்பு எல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க? உங்க அப்பா, அம்மா, இல்லை உன்னை சுத்தி இருந்த சமுதாயம் இவங்க தான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க, ஆனால் நீயா வளர்ந்து இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கும்போது, இந்த சரி, தப்பு எல்லாமே மாறும்".... இப்படி சொல்லிக் கொண்டேயிருப்பார். "இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் உங்க அப்பா, என்னையும் உங்க கூட சேர்ந்து திருட வச்சிருப்பார்" என்று ஹீரோயின் சொல்வாள்.

நம்மில் பெரும்பாலானோருக்கு நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயம் நல்லது கெட்டது, சரி தவறு, ஒழுக்கம் தொடர்பான வரையறைகளை சொல்லித் தந்திருக்கிறது. இவற்றில் சில விஷயங்கள் சமூகங்களையும், இடத்தையும், காலத்தையும் பொறுத்து மாறக் கூடியவை. ஆனால் சமுதாயம், இனம், மொழி, மதம் கடந்து இவற்றில் கடைபிடிக்க வேண்டியவை அறம் சார்ந்த  கோட்பாடுகளை மட்டுமே.

அறம் சார்ந்த விஷயங்களில் கூட, நம்முடைய சமுதாயங்கள் ஒரு சில விஷயங்களை இறுக்கிப் பிடிக்காமல் விடுவதுண்டு. பாலியல் தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பிறன்மனை நோக்காமை என்பது அறத்தில் இருந்தாலும், அதை கழுத்தை இறுக்குமளவு நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அட்லீஸ்ட், ஆண்கள் அப்படி இப்படி இருப்பதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது. இங்கு நாம், நம் சமூகம் என்று சொல்வதெல்லாம்  ofcourse பாரம்பரியமான, மூத்த குடியான தமிழ்ச் சமுதாயம் தான். சங்க காலத்தில் தலைவன் பரத்தையிடம் போவது முதல், இந்தக் காலத்தில் சின்ன வீடு வைத்திருப்பது வரை எல்லாவற்றையும், தமிழ்ச் சமூகம் மென்மையாகவே கையாண்டிருக்கிறது. இதற்காக யாரும் தூக்கிலிடப்பட்டதாகவோ, சிரச் சேதம் செய்யப் பட்டதாகவோ தகவல் இல்லை.

சிலர் தேவைக்காகவும், சிலர் இந்த ஒழுக்க மரபை மீறுவதால் கிடைக்கும் ஒரு இன்பத்துக்காகவும், சிலர் சூழ்நிலைகளாலும், பலர் விரும்பியும் பாலியல் தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இதை பெரும்பாலனோரால் ஒத்துகொள்ள முடிவதில்லை. இப்படி மீறுபவர்களில் சிலர் / பலர் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாதாமல் இருக்கலாம், சிலர் /பலர் குற்ற உணர்வுடன் மீறியிருக்கலாம். (உங்கள் மன முதிர்ச்சிக்கேற்ப சிலர்/பலர் போட்டுக் கொள்ளவும்). ஆனால் பலரால், இந்த ஒழுக்கக் கொள்கைகளை மீறி சிந்திப்பதையே ஏற்ற்றுக் கொள்ள முடிவதில்லை.

பத்து குடும்பம் இருக்கும் ஒரு தெருவில் குறைந்த பட்சம் நாலு குடும்பங்களில் பாலியல் ஒழுங்குமுறை விதிகளை (என்ன கண்றாவி இது, எப்படி எழுதுறதுன்னே தெரியல, முதல்ல இதுக்கு ஒரு பேர் வைங்க)  மீறிய சம்பவங்களை அடையாளம் காட்ட முடியும். அதிகபட்சம் இது பத்துக்குப் பத்தாகவும் இருக்கலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னால்  ஆண்கள் அளவுக்கு இல்லையென்றாலும் பெண்களும் கணிசமான அளவு இதைச் செய்கிறார்கள்.

பக்கத்துக்குப் பக்கம் தமிழ் நாளிதழ்கள் இந்த செய்திகளை தினமும் வழங்கிக் கொண்டிருந்தாலும், நிறைய பேரால் இதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இன்னமும் கேட்டால், மேலை நாடுகளில் தான் இதெல்லாம் அதிகம், நமது கலாச்சாரம், பண்பாடு இதை எல்லாம் அனுமதிப்பதில்லை என்பார்கள். எனக்குத் தெரிந்த வரை, கணவனோ மனைவியோ இப்படி இருப்பது பெரும்பாலும் மற்றவருக்கு (மனைவிக்கோ / கணவனுக்கோ) தெரிந்தே தான் இருக்கிறது. ஆனால், அதற்காக சின்ன சண்டைகள் முதல், அதிகபட்சம் சொந்தங்களைக் கூட்டி கமுக்கமாக ஒரு பஞ்சாயத்து வரைக்கும் தான் இந்த விஷயம் நகரும். பின்பு சமாதானமாகிவிடும். இதற்காக தண்டனை வழங்குவதோ, திருமண உறவை முறித்துக் கொள்வதோ நம் ஊரில் குறைவு தான்.

நமது சமுதாயம் இந்த திருமண உறவைத்தான் இறுக்கியிருக்கிறது. கோட்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் அல்ல. மனைவியை அடிப்பது கூட ஒரு ஒழுக்க மீறல் தானே? ஆனால் திருமணம் என்னும் பந்தத்தை பிரியாமல் காக்க இந்த ஒழுக்க மீறல் பெரும்பாலும் நம் சமூகத்தில் அனுமதிக்கப் படுகிறது. அதைப் போலவே தான் extra marital affairs கூட... ஆனால் மேலை நாடுகளில் இதைப் போல சம்பவங்கள் உடனடியாக  விவாகரத்து வரை வந்து, அது வெளிப்படையாக தெரியவும் செய்வதால், ஏதோ நம் சமுதாயம் அவர்களை விட புனிதமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

இதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் பயம்... இது போன்ற விஷயங்கள் நமது பிறப்பைக் கேள்விக் குறியாக்குகின்றன. இத்தனை காலமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும், குலப் பெருமை, பாரம்பரியம் இவற்றையை எல்லாம் இது தகர்த்தெறிகிறது. இன்னும் சொல்லப் போனால், இது நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஜாதி அமைப்புகளை கேலி செய்கிறது. இன்னொரு ஜாதிக் காரனின் ரத்தம் நம் உடம்பில் கலந்திருக்குமோ என்ற பயத்தை உருவாக்குகிறது. இந்த பயம் எல்லா ஜாதிக் காரர்களிடமும் இருக்கிறது.  இது நல்லதா கெட்டதா என்பதெல்லாம் அவரவர்களைப் பொறுத்தது. ஆனால் இப்படி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முகமூடி அணிந்துகொண்டு கண்ணாடி பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

பெருமாள் முருகன், திருச்செங்கொட்டு திருவிழாவைப் பற்றி எழுதியிருப்பதை பலர் ஏற்றுக் கொள்ள முடியாததற்கு இது முக்கியக் காரணம், முக்கியமாக அந்தப் பகுதி மக்கள். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், எல்லா ஊரிலும் திருவிழாக்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. பல பெருசுகள் இப்படி ஊர்த் திருவிழா சமயத்தில் தனித் திருவிழா கொண்டாடிய கதையை நானும் கேட்டிருக்கிறேன். .ராவின் மறைவாய் சொன்ன கதைகளில் பெரும்பாலும், இப்படி குடும்ப ஒழுக்கத்தை மீறிய கதைகள் தான்.இதில் அசிங்கப்பட எதுவும் இல்லை. கி ஒரு காலத்தில் எல்லாரும் ஆடை இல்லாமல் கூடத்தான் இருந்தோம், அதற்காக வெட்கப் பட்டு தூக்கு மாட்டிக் கொள்கிறோமா?

"சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தாலும் நடந்திருக்கலாம், அதற்காக ஆதாரமில்லாமல் அதையெல்லாம் எழுதி எங்கள் பெண்களை இழிவு செய்வதா?" என்று இந்துத்துவ வாதிகள் மட்டுமல்ல, சில முற்போக்கு முகமூடி கும்பலும் சில நாட்களுக்கு முன்பு கேட்டது. அதே கும்பல் கோவையில் இப்போது key exchange நடப்பதாகக் கேள்விப்பட்டு அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு தானே இப்படி இருந்தது? இப்போ ஏன் இதற்கு எதிருப்பு தெரிவிக்கிறார்கள்? இந்த சாவி மாறுவதைக் கூட, மேற்க்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் என்கிறது அந்தக் கூட்டம், ஆனால் கண்ணதாசன் வனவாசத்திலேயே இதை எழுதியிருக்கிறார்.

அந்த கும்பலுக்கு, அடியேனின் சின்ன அட்வைஸ் -
"இது அற நெறிகளுக்கு எதிரானது, இதெல்லாம் மாற வேண்டும் என்று நினைத்தால் முதலில், இப்படி நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், நடந்துகொண்டே தான் இருக்கும். நடந்துட்டுப் போகட்டும், என்னால் ஜீரணிக்க முடியாது என்றால் இருக்கவே இருக்கிறது Eno - மாத்திரையை விட சீக்கிரம் கரையும், வயிற்றெரிச்சலை ஆறே வினாடியில் குணப்படுத்தும்"

Wednesday, 9 April 2014

நஷ்டம் ஈட்டுவது எப்படி? 

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் ஊழியத்திற்கு ஏற்ற உழைப்பை மக்களிடம் இருந்து அரசு வாங்குவதில்லை என்று ஆதங்கமாக நண்பனிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயார் செய்துகொண்டிருக்கும் நண்பன் அளித்த பதில் " அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனம் போலச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது, அரசு இயந்திரத்தின் நோக்கம் எப்போதும் உற்பத்தியைப் பெருக்குவதிலேயே இருக்காது, சில நேரங்களில் சேவைக்காகக் குறைந்த இலாபத்திலோ, அல்லது நஷ்டத்திலோ இயங்க வேண்டி இருக்கும். 

சில நேரங்களில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, நூறு நாள் வேலைத் திட்டம் மாதிரி சில முடிவுகளை அரசு நிச்சயம் எடுத்துத் தான் ஆக வேண்டும். இந்த விஷயங்களில் உற்பத்தியை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாதுகாப்பு, குடிநீர் போன்று வேலை வாய்ப்பை உறுதி செய்வதும் அரசின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்று" 

நண்பன் கொடுத்த விளக்கம் புரியும்படி இருந்தாலும், இந்த அமைப்பில் உள்ள திறனின்மையால் அரசின் பணம் வீணடிக்கப் படுவதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்த பிற அரசு நிறுவனங்களும், ஏன் பிற அரசு சேவை நிறுவனங்களுமே கூட லாபத்தை அதிகரிப்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், எவ்வளவு தான் கட்டமைப்பு வசதிகள், வல்லுனர்கள் இருந்தாலும் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. 

லாபம் ஈட்டும் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளராகக் கடைநிலை மக்களைக் கொண்டிருக்கின்றன. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், டாஸ்மாக்கும் இதற்கு உதாரணங்கள். மது போன்ற ஆடம்பரங்களை அளிக்கும் நிறுவங்கள், லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், போக்குவரத்து போன்ற சேவை வழங்கும் நிறுவனங்களும் மறைமுகமாக லாப நோக்கிலேயே மக்களைச் சுரண்டி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதாகவே கணக்குக் காட்டப் படுகின்றன. 

விசேஷ நாட்களில் இயக்கப் படும் சிறப்புப் பேருந்துகள் ஒரு உதாரணம். பொங்கல் பண்டிகை நாட்களில் தென் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப் பட்ட பேருந்துகள், நெரிசலைத் தவிர்ப்பதற்காகத் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப் பட்டன. ஆனால் பயணச்சீட்டு கோயம்பேடு வரை வழங்கப் பட்டது. கிலோமீட்டர் விகித்தத்தில் திருச்சியில் இருந்து கோயம்பேடு 235 ரூபாய் என்றும், தாம்பரம் 215 ரூபாய் என்றும் வரையறுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப் பட்டப் பேருந்தில் கூடுதலாக ஒரு பயணச் சீட்டுக்கு 20 ரூபாய் வசூலித்து, போக்குவரத்துக் கழகங்கள் பொங்கல் லாபம் எனச் சில கோடிகளைக் காட்டி தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். 

இன்னொரு உதாரணம், பெங்களூரில் இருந்து சேலம் வரை செல்வதற்கு, கோயம்பத்தூர் வரை பயணச்சீட்டு வாங்கக் கட்டாயப் படுத்துகிறார்கள். எல்லா ஊரிலும் இதே நிலை தான். மோட்டல்களில் ஒரு வாய் குடிநீருக்காக பிரயாணிகள் கொள்ளையடிக்கப் படுவதைக் கண்டு கோபப்படும் நாம், இப்படி அரசாங்கமே ஏழைகளிடம் இருந்து சுரண்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். போதிய வேலை வாய்ப்புகளை எல்லா மாவட்டங்களிலும் உண்டாக்காமல், பிழைக்க வழி தேடி பெருநகரங்களுக்கு அரசால் விரட்டப்படும் தொழிலார்கள், என்ன விலை கொடுத்தாவது விசேஷ நாளில் மட்டுமாவது வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற நிலைக்கு அதே அரசால் மீண்டும் தள்ளப் பட்டு சுரண்டப் படுகிறார்கள். 

போக்குவரத்துக் கழகக் கடைநிலைப் பணியாளர்களுக்குச் சேவை வழங்குவதோ, அல்லது லாப நோக்கமோ எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலானோர் ஒரு கடமையாகத் தான் தங்கள் வேலையைச் செய்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களைப் போல், மாடாய் உழைத்து பத்து சதவீதம் ஊதிய உயர்வுக்காகத் தேய வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. சங்கங்கள் வேண்டிய ஊதிய உயர்வை வாங்கிக் கொடுத்துவிடும். ஆளும்கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் என்றால் வேலைக்கே வர வேண்டிய அவசியம் கூட இல்லை. கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் நிறுவனத்திற்காக உண்மையாக உழைத்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். இது போல, மக்களைச் சுரண்டும் உத்தரவுகள், கிளை மேலாலர்களாலேயே பிறப்பிக்கப் படுகின்றன, கிளையின், கோட்டத்தின் வருவாயை உயர்த்திக் காட்ட. 

தனியார் பேருந்துகளைப் போல, லாபம் வரும் வழித்தடங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை இயக்க முடியாது. இது கழகங்கள் சந்திக்கும் முதல் அடிப்படைப் பிரச்சினை. இரவில் நகரத்தில் பணி முடித்து கிராமத்துக்குச் செல்பவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, திரும்பும் போது காலியாகத் தான் வர வேண்டும். அதே போல் தான் அதிகாலை கிராமத்திற்குச் செல்லும் போதும். இது நிச்சயம் வருவாயை பாதிக்கக் கூடிய விஷயம். ஆனால் தமிழகத்தில் உள்ள போக்குவரத்துக் கோட்டங்களை ஒப்பிடும்போது  மதுரைக் கோட்டம் மட்டும் அதிக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 

மதுரைக் கோட்டத்தில் மட்டும் கிராமங்கள் அதிகமா? திறனின்மையா? அல்லது இது நிர்வாகச் சீர்கேடா? சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு முதன் முதலில் சென்ற போது எனக்கு வழங்கப் பட்ட அறிவுரை "சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் ஏறாதே, எல்லாப் பஸ்ஸும் ஒரே நேரத்தில் தான் போகும், காசை வீணாக்காதே". சிட்டி எக்ஸ்பிரஸ் பேருந்துகள் சில நிருத்தந்தகளில் நிற்காமல் செல்லும். அதற்கு எங்கள் ஊரில் LSS என்று பெயர். சாதாரணக் கட்டணத்தை விட, 50 பைசா அதிகம் வாங்குவார்கள். (இன்று ஒரு ரூபாய் அதிகம்). ஆனால் சிட்டி எக்ஸ்பிரசில் 30 - 50 % கட்டணம் அதிகம். 

அடுத்த இரண்டாண்டுகளில் தாழ் தளச் சொகுசுப் பேருந்துகள் மதுரையில் அறிமுகமாயின. ஓராண்டுக்குள் மாநகரின் பெரும்பாலான பேருந்துகள் தாழ் தளச் சொகுசுப் பேருந்துகளாக மாற்றப் பட்டன. சாதாரணப் பேருந்துகளின் வேகம் கட்டுப் படுத்த பட்டு, டீசல் சிக்கனம் கட்டாமயாக்கப் பட்டது. மதுரை சென்னை, கோவையைப் போல ஒரு தொழில் நகரம் அல்ல, சொல்லப் போனால் பெரிய கிராமம். விவசாயமும் அதனைச் சார்ந்த குறுந் தொழில்களுமே அதன் நாடி. மருத்துவமனை, விவசாயப் பொருட்கள் விற்பனை, கொள்முதல், ஜவுளி போன்றவற்றிற்காக ஏராளமான கிராமத்தார்களும், ஏழைகளும் நகரத்துக்குள் தினந்தோறும் பிரயாணம் செய்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் கிராமங்களில் இருந்து மதுரை நகருக்குள் இருக்கும் கடைகளில் வேலை செய்ய வருகிறார்கள்.  இந்நிலையில் கிட்டத்தட்ட சாதாரணப் பேருந்துகளையே ஒழித்து, நகர் முழுவதும் சொகுசுப் பேருந்துகளையே இயக்கி, இது தான் இயல்பு என்று மக்கள் நம்ப வைக்கப் பட்டுவிட்டனர். 

சொகுசுப் பேருந்துகளில் சாதாரப் பேருந்தை விட, இரண்டரை மடங்கு கட்டணம் அதிகம். குறைந்த பட்சக் கட்டணமே ஐந்து ரூபாய். திருச்சியில் குறைந்த பட்சக் கட்டணம் மூன்று ரூபாய்.  இதே தாழ் தள சொகுசுப் பேருந்துகள் திருச்சியில் மிகவும் குறைவாக அறிமுகப் படுத்தபட்டு, மக்களின் புறக்கணிப்பால் நிறுத்தப்பட்டது. மாநகரத்துக்குள் தான் இப்படி என்று நினைத்தால், வெளியூர் பேருந்துகளில் கூட, கும்பகோணம் கோட்டம் குறைவான கட்டணத்திலும், மதுரைக் கோட்டம் அதிக கட்டணத்திலும் இயக்குகின்றன. 

மற்றக் கோட்டங்களை விட மதுரைக் கோட்டம் பெரியது. அதனால் நிர்வகிக்க முடியவில்லை என்று 2010 இல் திருநெல்வேலி கோட்டம், மதுரையைப் பிரித்து புதிதாக உருவாக்கப் பட்டது. எவ்வளவு கட்டணத்தை உயர்த்தினாலும், முழுவதும் சொகுசுப் பேருந்துகளாக இயக்கினாலும், கோட்டத்தைப் பிரித்தாலும், இன்றும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது மதுரைக் கோட்டம். 

எந்த அரசுப் பேருந்துகளுக்கும் முறையான நேர அட்டவணை கிடையாது. பேருந்து நிலையங்களில் அதிகாரப் பூர்வமாக அட்டவணை எங்குமே ஒட்டப் படுவதில்லை. அப்படியே இருந்தாலும், ஒரு தடத்தில் பேருந்து ஏன் இயக்கப் படவில்லை என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. நமது கழகங்களுக்கு எவ்வித தொலைநோக்கும், நிர்வாகத்தைச் சீரமைக்கும் கொள்கைகளும் இல்லை. தங்களுடைய திறமையின்மையால் விளையும் நஷ்டங்களைக் குறைக்க, இது போன்று பொது மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். 

சேவையை விட லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும்பட்சத்தில், தொழிலாளர்கள் தங்கள் ஆளும்கட்சியா எதிர்க்கட்சியா என்பதை மறந்து உண்மையாக நிறுவனத்திற்காக உழைக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் இதற்கு உதவ வேண்டும். முறையான திட்டமிடல், கொள்கைகள் வகுத்தல், மேலாண்மை நிறவனங்கள் உதவியுடன் தணிக்கையில் ஈடுபடுதல், வளங்களை முழுமையாக, முறையாகப் பயன்படுத்துதல் ஆகியவையே உண்மையான லாபத்தைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஈட்டித் தரும். சேவை என்ற பெயரில் மக்கள் சுரண்டி லாபம் ஈட்டுவது அப்போது தான் நிறுத்தப் படும். 

Thursday, 27 February 2014

பதிவுகள் - 2


பிரியாணியை விட காஸ்ட்லியான சைட் டிஷ், வெங்காய தயிர் பச்சடி...

கையில் அரிவாளுடன் இருப்பவனிடம், "எனக்கும் தோலை உரிச்சுடுங்க" என்று சந்தோஷமாக சிக்கன் கடையில் தான் சொல்ல முடியும்

நம்மால் உச்சா போக முடியாது எனத் தெரிந்த பின்பு தான் இந்த பாழாய்ப் போன கிட்னி தீவிரமாக வேலை செய்கிறது...

தடை செய்யப் பட்ட பொருட்கள் என்பவை இந்தியாவைப் பொறுத்த வரை, கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து வாங்க வேண்டியவை..

40 ரூபாய் கேட்டு எங்களை ஏமாற்ற நினைத்த ஆட்டோகாரனுக்கு, ஒரு கிழிந்த பத்து ரூபாயை உள்ளே வைத்துக் கொடுத்து, அவனை ஏமாற்றிய நிம்மதியில் நுழைந்தோம் சபர்மதி ஆசிரமத்திற்குள்..

மசால் தோசையில் இருக்கும் மசாலாவை முதல் பீஸிலிருந்து கடைசி பீஸ் வரை Uniformஆக தொட்டு சாப்பிடத் தெரிந்தவனே சிறந்த Planning Engineer ...

எல்லா மீட்டிங்கும் இங்கிலிஷில் ஆரம்பித்து ஹிந்தியில் முடிகின்றன..

உட்கார்ந்து இருந்த மாடு தூக்கம் வருதுண்ணு, எந்திரிச்சு நின்னு தூங்குச்சாம்...

ஆடும் போது நாம் எசக்கு பிசக்காக எங்காவது பார்த்தால், கூட ஆடும் பெண்கள் தாண்டியா கட்டையால் தெரியாத மாதிரி கையிலேயே போட்டுவிடுகிறார்கள் # நவராத்திரி

நாய்களுக்குள்ள சண்டை வந்தா Bitch ன்னு திட்டிக்குங்களா???? # டவுட்டு

என்ன தான் pain killer injection போட்டாலும், போட்ட இடத்தில் வலிக்கத்தான் செய்கிறது..

you expect a lot from me.. when i fail to fulfill them, you are calling me as selfish..

சில சனியன்கள் நாம செத்தா கூட நரகத்துல வந்தும் தொல்லை கொடுக்கும் போல.

Wish, sometimes my mirror should have this button.. " Report Abuse"...

ஓவரா வாழ்க்கையைப் பத்தி யோசிச்சுகிட்டு இருந்தா தோசை கருகிபோய்டும்.

According to the mails in my spam folder, I am the richest man in the world..

பதிவுகள் - 1


டியூப் லைட் உபயம், மின் விசிறி உபயம், உண்டியல் உபயம் # கடவுளுக்கே அபயமும் உபயமும் கொடுக்க நம்ம ஆட்களால தான் முடியும்

அற்பனுக்கு வாழ்வு வந்தால் கரும்பு ஜூசில் Sugar Free Natura போட்டு குடிப்பானாம் ..

கலைஞர்கள் இறந்த பிறகும், கிரிக்கெட்டர்கள் ஒய்வு பெறும் போதும் மட்டுமே இந்தியாவில் பாராட்டப் படுகிறார்கள்

என்மேல் தூங்கி விழுபவனை, நாசூக்காய் தள்ளிவிட எப்போது குலுங்கும் பேருந்து என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

உலகிலேயே அதிகமான கேள்விகளுக்கு பதிலாக இருக்கும் ஒரு வார்த்தை - கடவுள்

படம் போட்ட பின்பு, புரொஜெக்டர் வெளிச்சத்தில் உள்ளே நுழையும் எல்லா பெண்களும் அழகாகவே தோன்றுகிறார்கள். # Optical Illusion...

பேய்கள் கூட இரவில் மட்டும் தான் பயமுறுத்துகின்றன, மனிதர்கள் பகலிலும்..........

ஊருக்கு வந்த ரெண்டு நாளைக்கு இங்க இருக்க எல்லா பொண்ணுங்களும் அழகா தெரியுறாங்க.. # எல்லாம் மாயை...

தண்ணீர் இல்லாத கழிவறையில், நீ கழித்த மலத்தை என் சிறுநீரால் கழுவி விடுகிறேன் # social service at Indian ரயில்வேஸ்

தெரிஞ்சவன் பாத்துடக் கூடாது என முக்காடு போட்டு பிட்டு படம் பார்க்கப் போன காலம் போய், இப்போது fake id வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்

ஓவரா ஷாப்பிங் செய்கிறாளே என்று "Confessions of a Shopaholic " படம் டவுன்லோட் பண்ணி கொடுத்தா, அதை வாங்கி வீட்ல வச்சுட்டு, "ஷாப்பிங் போயிட்டு வந்து நைட் பாத்துக்குறேன்" என்கிறாள்.

நான் : நஸ்ரியா செம அழகா இருக்கால்ல?
அவள்: மேக்கப் இல்லாம நஸ்ரியாவ பாரு சகிக்காது.
நான் : அவளை அட்லீஸ்ட் மேக்கப்போடயாவது பார்க்க முடியுது.
(அப்புறம் என் கதை முடிஞ்சுது)

தீபாவளி ஸ்பெஷல் 

தலைவர் : அண்ணே, pink vodka இருக்கா?
அண்ணாச்சி : இல்லப்பா .. வேற 
தலைவர் : பக்கார்டி சிட்ரஸ் இருக்கா?
அண்ணாச்சி : black தான் இருக்கு, அதுவும் 8 ஆவது கேஸ்ல தான் இருக்கு. இன்னும் ரெண்டு கேஸ் முடியுற வரைக்கும் வெயிட் பண்றியா? 

தலைவர் : சரி magic moments இல்லை, MGM ஆவது இருக்கா?
அண்ணாச்சி : யோவ், எவனாவது பேர் சொல்லி சரக்கு கேக்குறானா? 90ல ஒரு குவார்ட்டர் , 110 ல ஒரு குவார்ட்டர்ன்னு தானே கேக்குறான், ஏன்யா நீ மட்டும் எப்ப பாத்தாலும் சரக்கு பேரை சொல்லி கேட்டு சாவடிக்குற. 90 ல உனக்கும் ஒன்னு கொடுக்கவா?

தலைவர் : அதுக்கு நான் பூச்சி மருந்தை குடிச்சு சாவலாம். 160 ல ஒரு பிராந்தி இருக்குமே அதை கொடு.

தலைவர் : யோவ் என்ன 175 எடுத்துகிட்ட ?
அண்ணாச்சி : சரக்குக்கு 5 ரூவா, தீபாவளி காசு 10 ரூவா...

தலைவர் : ஒக்காளி, நீங்க இவ்ளோ கொடுமை பண்ணியும் குடிக்குறோம் பாரு எங்களை சொல்லணும்ய்யா....

நாய்க் கடி 

மழைக்கு வேகமாக வந்து ஒதுங்கிய டீக் கடை காலி இடத்தில் எனக்கு முன்னே ஒரு நாய் இருந்ததை கவனிக்கவில்லை. அதன் உறுமலைக் கேட்டு அதிர்ச்சி கலந்த பயத்தில் திரும்பிப் பார்த்த போது, செவலை கலந்த கருப்பில் படுத்துக் கொண்டிருந்தது. அதை உறுமல் எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை. அனால் அது தான் நாய்களின் முதல் எதிர்ப்பு.

இப்போது இருக்கும் தெருவில் எந்நேரமும் 20 நாய்கள் சுற்றிக்கொண்டு இருப்பதால், நாய்களைப் பார்த்தாலே கதறி வேலை செய்யும் எனது அட்ரீனல் மெதுவாகவே மழையின் குளிரில் வேலை செய்து ஓரிரு நிமிடங்களில் நின்றும் போனது. ஆனால் அந்த நாய் அப்படி அமைதி ஆவதாகத் தெரியவில்லை. அதன் சத்தம் இப்போது குரைத்தல் நிலைக்கு வந்தது. எப்படியும், இந்த கிராமத்தில் மணி, ஜிம்மி அல்லது டைகர் என்று தான் பெயர் வைத்திருப்பார்கள், எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம் என்று மூன்றையும் கூப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் குரைத்தல் அதிகமாகவே செய்ததோடு, மெதுவாக என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

குதிரைகளைப் போல நாய்களும் பயத்தை உணரும் என்பதால், முடிந்த வரை பயத்தை காட்டாமல், தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். நாய்கள் தங்களை கண்டுகொள்ளாமல் சாதரணமாக இருப்பவர்களை ஏதும் செய்வதில்லை. ஆனால் இங்கே அடுத்த நிமிடத்தில் எனக்கும் அதற்கும் மூன்று அடி மட்டுமே இருக்கும் அளவு என்னை நெருங்கி விட்டது. எனக்கு மேல கூரை கீற்றில் சொருகி இருந்த மீன் பிடிக்கும் தூண்டிலான மூங்கில் குச்சியை உருவினேன்.

இப்போது அதன் காதுகள் முழுதாக விரிந்து முகத்தை கீழ் நோக்கி வைத்து அதன் முன் பற்களை காட்டியது. frozen படத்தில் வரும் ஓநாயைப் போல் அதன் பற்கள் என் உயிர் வரை என்னை பயமுறுத்தியது . அதன் நெஞ்சில் மூங்கில் குச்சியை வைத்துத் தள்ளினேன். அவ்வளவு தான் நேராக என் மேல பாய வந்தது, நான் ஒரு வெறி பிடித்தவனைப் போல் குச்சியை சுழற்ற ஆரம்பித்தேன். பின்வாங்கினாலும் அது குரைப்பதை நிறுத்த வில்லை, நானும் நிறுத்த வில்லை. நாய்களின் பலவீனம் அதன் கால்கள் எனத் தெரிந்ததால் வளையும் மூங்கில் குச்சியால் முடிந்த வரை காலில் அடிக்கத் தொடங்கினேன். ஒரு வேகமான அடியில் வீல் எனக் கத்திக் கொண்டே மூத்திரம் பெய்துகொண்டே வெளியில் ஓடியது.

எதிர் வீட்டின் சந்துக்குள் நுழைந்து அந்த மழையில் மறைந்தது. எனக்கு அங்கிருந்து கிளம்ப வேண்டும் எனத் தோன்றினாலும், ஒரு கர்வத்துடன் மழை விடும் வரை நிற்கலாம் என்று தோன்றியது. கொஞ்ச நேரத்தில் நனைந்து கொண்டே ஒருவன் உள்ளே வந்தான். உயரமாக என்னை விட கொஞ்சம் கருப்பாக இருந்தான். கொஞ்ச நேரம் அவனைப் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். கொஞ்ச நேரத்தில் அடி வாங்கிய நாய்கள் கத்தும் ஒரு வித அழுகை சத்தம் கேட்டது. பக்கத்தில் அந்த நாய் இல்லை. கொஞ்ச நேரத்தில் எனக்கு இவன் தான் அந்த நாயோ என்ற சந்தேகம் வந்தது, எதையும் காட்டிக் கொள்ளாமல் மெதுவாகத் திரும்பினேன், அவன் கை, கால்களில் பிரம்பால் அடித்த வீக்கங்கள் இருந்தன.

இப்போது அட்ரீனல் முழுதாக வேலை செய்யத் தொடங்கி வியர்க்க ஆரம்பித்தது. ஒரு போர்வாளைப் போல் கையிலேயே வைத்திருந்த அந்தக் குச்சியை கீழே போட்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுக்கலாம் என

"நான் ஒன்னும் வேணும்னே அடிக்கல, நீ தான் பக்கத்துல வந்து பல்லை காட்டுன " என்றேன்.
"நான் என் வேலைய செஞ்சேன்" என்று என் பக்கம் திரும்பாமல் சொன்னான்.
"நான் பொதுவா நாய்கள் கிட்ட பாசமா தான் நடந்துக்குவேன். எந்த நாயையும் அடிக்க மாட்டேன், ஏன் இப்படி பண்ணுனேன்னு தெரியல, நீ தான் அப்படி என்னை அடிக்க வச்ச"
அவன் ஏதும் சொல்லாமல் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"உன் காது அப்போ இருந்த விதம், உன்னோட பல்லு, உன்னோட பாடி லாங்குவேஜ், அதை எப்படி சொல்றதுன்னு தெரில ஆனா நீ முழுசா என்னை கடிக்க வரது மாதிரியே இருந்துச்சு"

"எதை வச்சு அப்படி நெனச்ச?"
"எனக்கு நாய்களைப் பத்தி தெரியும், இப்படியெல்லாம் பண்ணுனா கண்டிப்பா கடிக்க வந்துடும்"
"உனக்கு நீ என்ன செய்யப் போறன்னே தெரியல, நீ எப்படி நான் இது தான் செய்வேன்னு நெனச்ச?

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "நான் முதல்லயே உன்ன எச்சரிச்சேன்" என்றேன்
"நானும் அதான் செஞ்சேன் " என்றான்.
எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது, ஆனால் அதை விட முக்கியம் பயம் என்னை ஆக்கிரமித்திருந்தது.
அவன் அருகில் சென்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே " i am sorry "
என்றேன். அவன் மேல் வீசிய தெரு நாய்களின் வாசனை மழை ஈரத்தில்
அதிகமாகக் குமட்டியது.

"நான் என்ன உன்னோட லவ்வரா ?" என்று கேட்டுக் கொண்டே என் பிடியில் இருந்து நழுவினான். "வேற எப்படி நான் மன்னிப்பு கேக்குறது "
"உன் கையில குச்சி இருந்துச்சு, அடிச்சுட்ட, இனி மன்னிப்பு கேட்டு என்ன ஆகப் போகுது" என்றான்.

"எனக்கு கில்டியா இருக்கு, இதுக்கு என்ன தான் பரிகாரம்?" எனக் கேட்டுக் கொண்டே அவன் கால்களைப் பார்த்தேன்.
"அதுக்கு பதில் சொல்றது ரொம்பக் கஷ்டம்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

"இப்படி சொன்னா என்ன பண்றது?" எனக் கேட்டேன்
வாசலில் நின்று என் பக்கம் திரும்பி "நீ அடி வாங்கும் போது உனக்குத் தோன்றும் பதிலுடன் என்னை வந்து பாரு" என்று சொல்லி விட்டு நனைந்து கொண்டே வெளியில் சென்றான்.
இந்த சனியன் புடிச்ச மழை எப்போது நிற்கும்?

துரத்தப்படும் மரணங்கள் 

அரிவாள் எனது கழுத்தில் விழுந்த போது தெறித்த ரத்தத் துளிகளுடன் நிமிர்ந்து பார்த்தேன், எங்கோ உயரத்தில் நின்று கொண்டு நீண்ட கைப்பிடி உடைய அரிவாளுடன் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இரண்டு வினாடிகள் தான், அதற்குள் ஒரு கூரிய ஈட்டி அவன் மார்பைப் பிளந்தது. அவன் நிமிர்ந்து மேலே பார்த்த போது, ஈட்டி எறிந்த கைகளுடன் ஒருவன் சிரித்தான், அடுத்த இரண்டு வினாடிகளில் அவனுடைய கழுத்தில் ஒரு கத்தி இறங்கியது, அவனும் மேலே நிமிர்ந்து பார்த்தான்.

யாரும் சாகவில்லை, அனால் எல்லோரும் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், மேலே பார்க்கப் பார்க்க இது தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்கிறது. அருகில் இதே போல் ஒரு வரிசையில் யானைகளும் இதே போல் ஒன்றை ஒன்று தங்களுக்குத் தெரிந்த முறையில் கொலை செய்து கொண்டே செல்கின்றன. அதற்கு அருகில் வரிக்குதிரைகள், கீரிகள், ஓநாய்கள், மீன்கள், பாக்டீரியாக்கள்........ பக்கவாட்டு வரிசையும் மேல் நோக்கிய வரிசையும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. உயிரின் கடைசித் துளி மட்டுமே எல்லோரிடமும் மிஞ்சுகிறது.

வெளியேறத் துடிக்கும் கடைசி உயிர்த் துளியை என்னால் முடிந்த வரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில் இருக்கும் யானையும் வரிக்குதிரையும் இதையே செய்து கொண்டிருக்கின்றன. எனக்கு மேலே என்னை வெட்டியவனும் தன் உயிரின் கடைசித் துளியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் உயிரின் மேலான பற்று மட்டுமே எங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன்.

இந்த சங்கிலியில் ஒருவன் அல்லது ஒரு குதிரை அல்லது ஒரு திமிங்கலம் "எனக்கு இந்த உயிர் வேண்டாம்" என விட்டு விட்டால் இந்த மொத்த அமைப்பும் சிதைந்து விடும் என்று உணர்ந்து கொண்டேன். உயிர் வேண்டாம் என வெறுக்கும் ஒருவன் இந்த சங்கிலியில் எங்காவது இருக்கிறானா எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் என் உயிர்த் துளியை மட்டும் இணைப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வெளியில் இருந்து சங்கிலித் தொடரை உற்று நோக்குகிறேன்

அது முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது, அதன் தொடக்கத்தை அறிய இன்னும் வெளியே வந்து பார்க்கிறேன், நட்சத்திரங்களுக்கு வெளியே செல்லச் செல்ல சங்கிலி மெதுவாக வளைகிறது. நான் இப்பொழுது அண்டங்களைத் தாண்டி வெளியில் சென்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் , வளைந்த சங்கிலி மேலும் வளைந்து தொடக்கப் புள்ளி இல்லாத ஒரு வட்டமாகத் தெரிகிறது.

கருமம் புடிச்ச காதல் கதை -1 

நேற்றைய டேட்டில் இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. அந்த டிராவல்ஸ்க்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவர்கள் அந்த பஸ்ஸை கேன்சல் செய்ததால் தான், நேற்று அறை எடுக்க ஒத்துக் கொண்டாள். முதல் முத்தத்தின் போது அப்படி நெளிந்தவள் நேற்று முழுவதும் கொடுத்துவிட்டாள். நல்லவேளை பக்கத்தில் மெடிக்கல் இருந்தது. 

மதியம் தான் வந்ததால், களைப்பில் இரவு எட்டு மணி வரைதூங்கினான். விழித்ததும் நேற்றைய இரவின் நினைவுகளாகவே இருந்தது. அவளை மடியில் கிடத்திக் கொண்டு நேற்றைய பொழுதுகளைப் பற்றி பேசி அவளின் வெட்கத்தைக் காண ஆர்வமாக இருந்தான், அது சரி அவள் இந்நேரம் ஹாஸ்டலில் தூங்கி விழித்திருப்பாளா? என்று யோசித்துக் கொண்டே தனது ஐபோனை எடுத்தான்.

அவன் நினைத்த நேரத்தில் தான் அவளும் விழித்து தன்னுடைய போனை எடுத்தாள். i love u chellam, ummmmmaa என whatsapp இல் டைப் செய்தவன் திடீரென எதோ தோன்ற அதை அழித்து விட்டு, ஏற்கனவே deactivate செய்திருந்த தனது fake id யை ஆக்டிவேட் செய்தான். அவளும் தன்னுடைய பழைய தமிழ் matrimony அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்திருந்தாள்.

பாரதி-யார் ?

இன்று எல்லா பள்ளிகளிலும் பாரதி விழா சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கும். தமிழாசிரியர்கள் மட்டும் விழுந்து விழுந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருப்பார்கள். மற்ற ஆசிரியர்கள் தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தங்கள் வேலைகளில் மூழ்கி இருப்பார்கள். தமிழில் பேசினால் தண்டனை வழங்கும் பள்ளிகள் கூட இன்று குழந்தைகளுக்கு பாரதியைப் போல மாறு வேடப் போட்டி நடத்தி, 4 கவிதைகள் ஒப்புவிக்க வைத்து தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வார்கள்.

நிச்சயம் பாரதியார் கவிதைகள் புத்தகம் பரிசாக வழங்கப்படும். மொத்தமாகப் பார்த்தால் எல்லா பள்ளிகளின் போட்டிகளிலும் ஒரு இருபது பாடல்கள் தான் மாறாமல் இருக்கும். சங்கே முழங்கு, செந்தமிழ் நாடென்னும், சிங்களத் தீவினிற்கோர் ........... ஒரு நான்கு வகை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி தலைப்புகள். கவிதைகளை குழந்தைகளே மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும். பேச்சுப் போட்டிக்கும் கட்டுரைக்கும் தமிழாசிரியர்களே எழுதிக் கொடுத்து விடுவார்கள்

அது போன வருடம் எழுதியதாகக் கூட இருக்கும். திக்காமல் உரக்கக் கத்திப் பேசுபவனுக்கு கண்டிப்பாக பரிசு நிச்சயம். அதுவும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லும்போது சிமெண்ட் தரையே பெயர்ந்துவிடும் அளவுக்கு காலை உதைத்து கத்தினால் நிச்சயம் முதல் பரிசு. பாரதியின் வாழ்க்கையும் எழுத்தும் மாணவர்களுக்கு புரிந்ததா என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. முக்கியமாக பாரதியை யார் என்று குழந்தைகளிடம் அறிமுகப் படுத்துவதிலேயே நிறைய தோல்விகள் தமிழ் ஆசிரியர்களிடம்.

கவிஞன், புரட்சியாளன், தேசபக்தன், கட்டுரையாளன், சிறுகதை ஆசிரியர் இதில் எதைச் சொல்லி அறிமுகப் படுத்துவது? சில தேசபக்திப் பாடல்கள், சில தனிப்பாடல்கள் இதை மட்டுமே வைத்துக் கொண்டு காலம் முழுவதும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள். பாரதி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார் என்று மேலோட்டமாக எங்காவது குறிப்பு வந்தால் கூட என்ன எழுதினார் என்று எந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு விளக்கியதில்லை. அத்தனையும் அருமையான கட்டுரைகள்.

கட்டுரையின் சில சொற்கள் அந்த காலத்தியதாக இருந்தாலும் தரமும் அதன் கருப்பொருளும் இன்றும் நாம் விவாதிக்கத் தகுந்தவை. உதாரணமாக இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் தாய் மொழியில் மருத்துவ, தொழில்நுட்பப் படிப்புகள் வர வேண்டும் என்பதைப் பற்றி அன்றே விவாதித்திருக்கிறார். நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்ற இன்றைய இளைஞர்களின் கேள்விக்கு அருமையான எளிய விளக்கம் அவர் கட்டுரைகளில் இருக்கிறது.

பாரதி சிறுகதை, கட்டுரை எழுதி இருக்கிறார் என்று எனக்கு சென்ற வருடம் தான் தெரியும். எத்தனை பேர் இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நவீன உரைநடையின் முன்னோடிகளில் பாரதியும் ஒருவர். அனால் இந்த தமிழாசிரியர்கள் இந்த கட்டுரைகளையும் கதைகளையும் முழுதாகப் படித்திருக்கிறார்களா என்றால் சந்தேகமே. பாரதியின் தேசப் பற்று, சாதி ஒழிப்பு, சமூக அக்கறை இப்படி எந்த தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வந்தாலும் சரி, எதிலுமே அவருடைய உரைநடையில் இருந்து மேற்கோள்கள் இருக்காது. எல்லாமே அவருடைய கவிதைகளின் அடிப்படையில் தான் இருக்கும்.

மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஆசிரியர்கள் கட்டுரைகளைப் படித்திருந்தால் நிச்சயம் அவர்கள் மேற்கோள் காட்ட எக்கச்சக்கமான கருத்துகள் அதில் உள்ளன. அல்லது அவர்கள் பாரதியை வெறும் கவிஞனாக மட்டுமே பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. முடிந்தால் பாரதியார் கட்டுரைகள் புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதிலிருந்தாவது ஆரம்பிக்கலாம்.

சரி கவிதையிலாவது அவர்கள் புரிதல் சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தேமா புளிமா என மாணவர்களுக்கு யாப்பு சொல்லித் தரும்போதே இந்த கட்டமைப்பை எப்படி உடைத்து புதுக்கவிதை படைத்திருக்கிறான் பாரதி என்று சொல்லிக் கொடுத்திருந்தால், இன்று அவனவன் கவிதை எழுதிக் கொண்டு திரிந்திருக்க மாட்டான்

பாரதியின் கட்டுரைகள் இணையத்திலே படிக்கக் கிடைக்கின்றன. தவறவிட்டவர்கள் இன்றே படிக்கவும். வாழ்த்தி வாழ்த்தி போஸ்ட் போட்டும், அவர் படங்களை ப்ரொபைல் படமாக வைத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களால் முடிந்தால் மற்றவர்களையும் படிக்க வைக்கவும்.

http://www.tamilvu.org/library/lA450/html/lA450cnt.htm
ஏ.கே. செட்டியார் நூல்கள் வாங்க

தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை, பயண நூல்கள் எழுதுபவர்களுக்குக் கட்டாயப் பாடம் என்று சுஜாதா முதல் சாரு வரை எல்லோராலும் பரிந்துரைக்கப் பட்டாலும் ஏ.கே.செட்டியாரின் புத்தகங்கள் போதுமான விளம்பரமின்மையால் மக்களை முழுதாகச் சென்றடையாமலே இருக்கின்றன 

செட்டியார் மொத்தம் 18 நூல்கள் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. மணிக்கொடிக்கு இணையான ஒரு சிற்றிதழை "குமரி மலர்" என்ற பெயரில் நடத்தி இருக்கிறார். காந்தியைப் பற்றிக் காந்தி வாழ்ந்த காலத்திலேயே டாகுமெண்டரி படம் தயாரித்தார். இதற்காக footage சேகரிக்கவும் உலகம் முழுவதும் பயணித்திருக்கிறார். காந்தியைப் பற்றிய இவரது "அண்ணலின் அரிச்சுவட்டில்" காலச்சுவடு வெளியீடாகக் கிடைக்கிறது.

இவருடைய பயண நூல்களில், 8 மட்டுமே வாங்கக் கிடைக்கின்றன "மலேயா முதல் கனடா வரை" மற்றும் "கரிபியன் கடலும் கயானாவும்" இரண்டும் அகல் வெளியீடாகக் கிடைக்கிறன. "தமிழ்நாடு-நூறாண்டுகளுக்கு முந்திய பயணக் கட்டுரைகள்" சந்தியா பதிப்பக வெளியீடாகக் கிடைக்கிறது. சில நூல்கள் திருச்சி பானு பதிப்பகத்தாலும், தையல் வெளியீடாகவும் வந்துள்ளன.

இந்தி பயண இலக்கியத்தின் தந்தையான ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) யின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைக்கும் அளவுக்குக் கூடச் செட்டியாரின் புத்தகங்கள் பரந்த தமிழ் வாசகப் பரப்பைச் சென்றடைய வில்லை. ராகுல்ஜீக்கு தபால் தலை வெளியிட்டும் அவர் பெயரால் இந்தி பயண எழுத்தாளர்களுக்கு தேசிய விருது வழங்கியும் அரசு அவரைக் கௌரவத்திருக்கிறது.

தன் சொந்த செலவில் உலகைச் சுற்றி நமக்கு அதைப் பயண இலக்கியமாகக் கொடுத்த செட்டியாருக்கு நம்மால் அந்த அளவு நன்றி செய்ய முடியாவிடினும், அந்தப் பொக்கிஷங்கள் மக்களைச் சென்றடையவாவது வழி செய்ய வேண்டும். உயிர்மை, வம்சி, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்கள் அவற்றைத் தொகுத்து மொத்தமாக வெளியிட்டால் வாங்குபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இணையத்தில் வாங்க விரும்பும் நண்பர்களுக்காக இந்தப் பட்டியலைக் கொடுத்துள்ளேன்
http://www.bookconnect.in/ தளத்தில் கீழ்க் கண்ட நூல்கள் கிடைக்கின்றன
1. மலேயா முதல் கனடா வரை - 70 ரூபாய்
2. தமிழ்நாடு-நூறாண்டுகளுக்கு முந்திய பயண கட்டுரைகள் - 200 ரூபாய்
3. ஐரோப்பா வழியாக - 100 ரூபாய்
4. உலகம் சுற்றும் தமிழன் - 50 ரூபாய்
5. குடகு - 75 ரூபாய்
6. பிரயாண நினைவுகள் - 50 ரூபாய்
7. கரிபியன் கடலும் கயானாவும் - 65 ரூபாய்
மற்றும்
8. அங்கும் இங்கும் - 65 ரூபாய் - www.nhm.in
நண்பனுக்காக திருச்சி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, என்னருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். எந்த பஸ்ஸில் எந்த பொண்ணு ஏறுகிறாள் என்ற ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்ததால் அவரை நான் கண்டுகொள்ளவில்லை.
"சார்" என்று அவரே பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். 
ஏதோ பஸ் ரூட் தான் கேட்கப் போகிறார் என்று திரும்பினேன்

"பூனா ல மலை மேல ஒரு பஸ் கவிழ்ந்து நெறைய பள்ளிக் குழந்தைகள் இறந்துட்டாங்களே, இதுக்கு என்ன காரணம்ன்னு நெனக்குறீங்க?"
என்னடா இந்த ஆளு சமந்தம் இல்லாம ஏதோ கேக்குறாரே என்று பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்
"நாட்டில, சுனாமி, பூகம்பம் எல்லாம் வந்து நெறய பேர் சாகுறாங்களே? ஏன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியலைங்க, நீங்களே சொல்லுங்க" என்றேன்
"இந்த புத்தகத்தைப் படிங்க, இதுல எல்லா விளக்கமும் இருக்கு" என்று சொல்லி கையில் அழகாக கவர் டிசைன் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்ததுமே சிரிப்பு வந்துவிட்டது, சிக்கிட்டாண்டா ஒருத்தன், நண்பன் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும், இந்த ஆளை விடக் கூடாது என்று முடிவு செய்து
"நீங்களே சொல்லுங்களேன், இதுக்கெல்லாம் என்ன காரணம்?" என்று கேட்டேன்.

"இதுக்கெல்லாம் மனிதன் செஞ்ச பாவம் தான் தம்பி காரணம்"
"சுனாமி, பூகம்பத்துக்கு கூடவா?"
"ஆமா தம்பி, அவ்வளவும் பாவம்"
"அது சரிங்க, அந்த குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க?"
"அது அவங்க போன ஜென்மத்துல செஞ்ச பாவம் தம்பி, கடவுள் எல்லா பாவத்தையும் கணக்கு வச்சுருப்பாரு"

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "சார் நான் ஒரு இஞ்சினியர், நான் கடவுளை நம்புவேன், எனக்கு ஒரு கோடி லாட்டரியில பரிசு விழும்ன்னு கூட நம்புவேன், அது என் இஷ்டம். ஆனால் என்கிட்டே வந்து நீங்க கடவுள்ன்னு பேசுனா, அதுக்கு நான் ஆதாரம் கேட்பேன். ஆதாரப்பூர்வமா நிரூபிக்க முடியாத எதையும் என்னோட அறிவியல் அறிவு ஒத்துக்காது" என்றேன்.

"சரிங்க தம்பி நீங்களே சொல்லுங்க, இதுக்கெல்லாம் என்ன காரணம்" என்றார். "பஸ் மலையில இருந்து கவிழ்ந்து விழுகுறது ஒரு விபத்து, அதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம், probability தியரி தான். பூகம்பம் லாம் ஏன் வருதுன்னு எட்டாங்கிளாஸ் அறிவியல் புக்குலேயே இருக்கு"

"அப்போ கடவுள் இல்லைன்னு சொல்லுறீங்களா?"
"கடவுள் இருக்காரு சார், உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியாதுன்னு சொல்றேன்"
"தம்பி அந்த புக்கை முழுசா படிச்சு பாருங்க"
"புக்கை விடுங்க சார், நீங்க காட்டுறீங்களா கடவுளை?"
"தம்பி கடவுள் தான் நம்ம எல்லாரையும் படைச்சாரு, நீங்க அவரையே கேள்வி கேக்குறது தப்பு"

"கடவுள் நம்மளை படைச்சாரா? எங்க இருந்து படைச்சாரு?"
"தேவலோகத்தில இருந்து படைச்சார்"
"அப்போ அந்த தேவலோகத்தை யாரு படைச்சா?"
"அதையும் அவர் தான் படைச்சார்"
"எங்க நின்னுகிட்டு அவர் தேவலோகத்தை படைச்சாரு?"
"தம்பி இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது"
"சரி அதை விடுங்க, கடவுளை யாரு படைச்சாங்க?"
"அவரு தன்னைத் தானே படைச்சுகிட்டார்"
"காமெடி பண்ணாதீங்க"

"என்ன தம்பி, ஒரு செல் தன்னைத் தானே இரட்டிப்பாக்கி கொள்கிறதுன்னு படிச்சா நம்புறீங்க, கடவுள் தன்னைத் தானே படைச்சுகிட்டார் ன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறீங்க?"
"சார், செல் இரட்டிப்பாகுறதுக்கு முதல்ல ஒரு செல் வேணும், நான் அந்த முதல் செல் எங்க இருந்து வந்துச்சுன்னு தான் கேக்குறேன்"

"தம்பி அதுவும் கடவுள் கிட்ட இருந்து தான் வந்துச்சு"
"குழப்பாதீங்க, கடவுள் செல்லை படைச்சாரா? இல்லை ஆதாமை படைச்சாரா?" இந்தக் கேள்விக்கு அவர் பாவம் மௌனமாகிவிட்டார்.

"சரி சார், அதை விடுங்க, இந்த பாவத்துக்கு வாங்க, போன ஜென்மத்தில பாவம் பண்ணுனவங்க குழந்தையா இருக்குறப்பவே சாகுறாங்கன்னு சொல்றீங்க, எனக்கு 23 வயசாகுது இன்னும் நான் சாகலையே, போன ஜென்மத்தில அவ்வளோ நல்லவனாவா இருந்தேன்?"

"உங்க பாவத்தை அவர் தன்னோட இரத்தத்தால கழுவி விடுகிறார் தம்பி"
"அப்போ அந்த குழந்தைகள் பாவத்தையும் கழுவி விட வேண்டியது தானே?"
"அவங்க செஞ்ச பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கூட கேட்காதவர்கள் தம்பி"

"அவர் தான் எங்களைப் படைச்சாரு, அவரு தான் எங்களை பாவம் செய்ய வச்சாரு, அவரே சிலரை பாவ மன்னிப்பு கேட்க வச்சு, மன்னிச்சுடுறாரு, சிலரை மன்னிப்பே கேட்க வைக்காம தண்டிச்சுடுறாரு, எல்லாமே அவர் செயல் தானே. அவரு ஏன் இப்படி இருக்காரு, ஒருத்தருக்கு ஒரு நியாயம் இன்னொருத்தருக்கு ஒரு நியாயம்? நீங்க அவர்கிட்ட இதை எல்லாம் தட்டிக் கேக்க மாட்டீங்களா?

இந்தக் கேள்வியோட அவர் கிளம்பிப் போய்விட்டார். ஒரு மூணு நாலு தடவை அந்த பிளாட்பார்மில் நடந்தார், கடைசி வரைக்கும் என் முகத்தையே பார்க்கவில்லை.
வியர்வையிலும்
வெயிலிலும்
இடையிலும்
கொடியிலும்
கொஞ்சம் கொஞ்சம் நீரிலும் 
கந்தலாகிப் போகும் வரை 
கருமம் புடிச்ச வாழ்க்கைதான் 
உள்ளாடைகளுக்கு

கல்விக் கூடங்களும் கழிப்பிடங்களும்

சேத்தன் பகத்தின் நாவலில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், கழிவறைக்குச் செல்ல அவரிடம் அனுமதி கேட்பாள், அவர் சிரித்துவிட்டு "எந்த ஊர்? கல்லூரிக்குப் போனதில்லையா?" என்று கேட்பார். "கோயம்புத்தூர், டிஸ்டிங்கஷன்" என்பார் அந்தப் பெண். அவர் மீண்டும் சிரித்துவிட்டு "கழிவறைக்குச் செலவதற்கு எல்லாம் அனுமதி கேட்கத் தேவை இல்லை" என்பார். 

மேலோட்டமாகப் படித்தபோது தென்னிந்தியர்கள் மீதான அவரின் பகடிகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றினாலும், ஒரு கணம் பள்ளியில் ஆசிரியர் முன்பு ஒற்றை விரலை நீட்டி "சார் சார்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தது நியாபகத்திற்கு வந்து தான் சென்றது. ஒருவன் கேட்கும் போது, மற்றவர்கள் நிச்சயம் சிரிப்பார்கள். கொஞ்சம் வயது முதிர்ந்த பின்பு, இந்தக் கேலிகளுக்குப் பயந்து நேரம்கேட்ட நேரத்தில் ஆசிரியரிடம் கேட்காமல் இருக்கப் பழகிவிட்டோம்

ஆனால் அதெற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடைவேளை நேரங்களில் கூடச் சில பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், பொதுவாகக் கலையில் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். மாலை வேளைகளில் அதுவும் இல்லை. இரண்டு மணிக்கு மதிய உணவு முடித்து வரும் குழந்தைகள் ஐந்து மணி வரை கழிவறைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.

இடைவேளைக்கான பதினைந்து நிமிடங்களை அதற்கு முந்தைய வகுப்பு ஆசிரியரோ, அல்லது அதன் பின் வருபவரோ சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர். பாடத்திட்டத்தைச் சீக்கிரம் முடிக்க இந்தக் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார்கள். காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள், மதிய உணவு நேரத்தில் தான் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். அதுவும், மொத்தக் குழந்தைகளும் அந்த நேரத்தில் தான் கழிவறைக்குச் செல்ல வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலுக்குப் பயந்தே பல குழந்தைகள் மாலை வரை சிறுநீர் கழிக்காமலேயே இருந்துவிடுகிறார்கள்.

முக்கியமாக இந்தக் கொடுமைகள் பெண்கள் பள்ளிகளில் தான் அதிகம் நடக்கின்றன. மதிய உணவு இடைவேளையில் கூடப் படித்துக் கொண்டே சாப்பிடச் சொல்லும் சில மெட்ரிக் பள்ளிகளைப் போல இவைகளும் , மதிப்பெண்களுக்காகக் குழந்தைகளின் அறிவையும், உடலையும் சேர்த்தே சீரழிக்கிறார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, நகர்ப்புறங்களில் உள்ள டியுஷன் சென்டர்களில் ஒரே நேரத்தில் நூறு பேருக்குப் பாடம் நடத்த இடவசதி செய்யப் படுகிறதே தவிர அவர்களுக்குத் தேவையான கழிப்பிட வசதிகள் பற்றி அமைப்பாளர்களோ, பெற்றோர்களோ கவலைப்படுவதில்லை.

தமிழகப் பள்ளிகளில் 20 சதவீதப் பள்ளிகளில் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கழிப்பிட வசதி உள்ள பள்ளிகளில் அவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கப் படுவதில்லை. கட்டாய இலவசக் கல்வியைப் போல, பள்ளிகளில் கழிப்பிடமும் மாணவர்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், அதிகாரிகளோ, ஆசிரியர்களோ அதைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை.

கழிப்பிடங்களைப் பயன்படுத்த முடியாததால், குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்கின்றனர். இது சிறுநீரகக் கல் உருவாக ஒரு முக்கியக் காரணியாக அமைந்து விடுகிறது. அதிகப்படியான உப்பு, கால்சியம் உட்கொள்ளுதல், ஆகியனவும் சிறுநீரகக் கற்களுக்குக் காரணங்களாகச் சொல்லப் பட்டாலும், போதிய தண்ணீர் பருகாதது தான் முக்கியக் காரணியாக இருக்கிறது. குழந்தைகளிடம் குறிப்பாக வளரிளம் பருவ பெண்களிடம் சிறுநீரகக் கல் உருவாதல் கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிறுநீரகக் கற்களால் வரும் வலி, பிரசவ வலிக்கு நிகரானதாகக் கருதப் படுகிறது, இதில் முக்கியமானது குழந்தைகளுக்கு எங்கே வலி இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லத் தெரியாது, இதனால் அதனைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு ஆகும் காலத் தாமதத்தில் வலியால் அவதிப்படப் போவது நம் குழந்தைகளே.

ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் அறிவியல் ஆசியர் திரு ஜெகதீசன், சிறுநீரகக் கல் என்றால் என்ன என்று விளக்கி, "உனக்குச் சிறுநீர் வந்தால் என்னிடம் கேட்கவேண்டும் என்று அவசியமில்லை, என்னுடைய வகுப்பு ஆரம்பிக்கும் முன் ஐந்து நிமிடம் நீ தாரளமாகக் கழிப்பிடதைப் பயன்படுத்திவிட்டு வரலாம், ஐந்து நிமிடம் நீ என் பாடங்களைத் தவறவிட்டால் ஒன்றும் பெரிதாக இழக்கப் போவதில்லை" என்று சொல்லிக் கொடுத்தது பாடங்களை விட வாழக்கைக்கு நிறையக் கொடுத்தது. பல பள்ளிகளில் இன்று அநேகக் குழந்தைகள் சுண்டு விரலை நீட்டி அனுமதி கேட்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

அது விழுந்துகொண்டிருக்கிறது

வைக்கப்படும் போதே விழுந்துவிடும் எனத் தெரியும் 
வைக்கப்பட்டதே விழுவதற்காகத்தானோ? தெரியாது 

விழவைக்கவே அசைந்துகொண்டும் இருக்கிறேன்
விழாமல் இருக்க அதுவும் முயலவில்லை 

விழுந்துவிடு என்று ஒரு மனமும்
விழாதே என்று ஒரு மனமும் போராடிக்கொண்டிருக்கின்றன

அது எந்த மனதின் வேண்டுதலையும் கவனிக்கவே இல்லை
அதன் நிலையில்லாமையின் போக்கிலேயே விழுந்துகொண்டிருந்தது

கடைசில் பிடித்துக்கொள்ளலாம் என்று ஒரு மனமும்
பிடிக்காதே விட்டுவிடு என்று ஒரு மனமும் போராடத் தொடங்கின

விழும் நொடியை உறைய வைத்து ஓடினாலும் எட்டாத தூரத்தில்
விழுந்து கொண்டே தான் இருக்கிறது பேனாவும் வாழ்க்கையும்
கடவுளை மட்டுமே காதலிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறாய்
மனிதர்களைக் காதலிக்க இன்னும் உனக்குத் தகுதியில்லை

தேவதைகள் விற்கும் கடை 


எல்லா தேவதைகளையும் வாங்கிவிட நினைக்கிறாள்
என்னுடைய தேவதை
ப்பா, அந்த பொம்மையும் ப்பா...
வெட்டிக் கொண்டே இருக்கிறேன் 
வளர்ந்துகொண்டே இருக்கின்றன
நகமும் காமமும்...

மொழி 

என் போர்வைக்குள் இருக்கவே விரும்பினாள் அவள் 
தூக்கம் போனால் ப்ரோபேஷனில் லீவும் இல்லை

முகத்தை மட்டுமே நீட்டினேன்; காதருகில்
உள்ளே வரவா என்று கெஞ்சினாள் 

கெஞ்சல்கள் கொஞ்சல்களாய் இனிக்க 
கண்ணயர்ந்த நேரத்தில் கன்னத்தைக் கடித்தாள்

இருட்டில் அவளை அணைக்கத் தேடுகையில் 
நழுவிச் சென்று கால்களின் இடையே இருத்திக்கொண்டாள்

தூண்டிவிட்டு ஓடுவதிலேயே நீ பெண்ணாகிறாய் பெண்ணே
உன்னிஷ்டம் என்று சொல்லி உறங்கச் செல்கையில்
காதில் வந்து கொஞ்சியே கொல்கிறாள்

என் தூக்கம் கலைக்கும் அந்தக் கொஞ்சல்களுக்கு
அர்த்தம் தேடியே பகலிலும் அலைகிறேன்

கொசுமொழி - தமிழ் - தமிழ் அகராதி கிடைக்குமா?

கூர்வலி


வார்த்தைகளை வேட்டையாட முயன்று முயன்று 
தோற்றுக் கொண்டிருக்கிறேன்

என் வலியின் கூர்மையில் 
அத்தனை வார்த்தைகளும் நொறுங்குகின்றன

வலி என்னைக் கிழித்துவிடாமல் இருக்கவே 
வார்த்தைகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறேன் 

உன் பலத்தால் உண்டான வலிகளை 
சிறுநீர் கழிக்கையில் எரிச்சலாகவும்
இருட்டிய அறையில் தனிமையாகவும் 
கடத்திக்கொண்டிருக்கிறேன் 

என் இயலாமையால் வந்த வலியைத் தான் 
மறைக்கவோ கடக்கவோ முடியாமல் தவிக்கிறேன்

அம்மாவையும் கிழித்துவிட விருப்பமில்லை, 
இந்த டையரியையேனும் கிழிக்காதிருக்க முயல்கிறேன் 
அந்தக் கூர்மை சகலத்தையும் கிழித்துவிடுகிறது

என்னைக் கிழித்தாலொழிய மழுங்காக் கூர்மை அது.
திருடப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு பென்சிலாகவோ 
செருப்பாகவோ
நூறு ரூபாய்த் தாளாகவோ

ஒரு பொம்மையாகவோ
மூகுத்தியாகவோ
செல்போனாகவோ 

ஒரு பர்ஸாகவோ
புத்தகமாகவோ
செயினாகவோ

திருடப்பட்டிருக்கிறீர்களா?

திருடியவுடன் வரும் நடுக்கத்தையும்
யாருமற்ற போது அதை எடுத்துப் பார்க்கையில் சந்தோஷத்தையும்
தொலைத்தவனை நினைக்கையில் வரும் குற்ற உணர்வையும்
மீண்டும் மீண்டும் திருடத் தூண்டும் வேட்கையையும்

திருடனாக உணர்ந்திருப்பீர்கள்
திருடியவன் கையில் இருக்கும்போது
திருடனை உணர்ந்திருக்கீர்களா?

திருடப்பட்டிருக்கிறீர்களா?

Sunday, 23 February 2014

பொதுவில் மட்டுமா பெண்களுக்கு உரிமை மறுக்கிறோம்?


பெண்கள் மீதான அடக்குமுறை என்பதைச் சின்ன வயதில் இருந்தே தொடங்கி விடுகிறோம். தங்கையிடம் நம்முடைய பொம்மைக் காரை கொடுக்க மறுப்பதில் இருந்து, நான் ஒரு ஆண், நீ ஒரு பெண் என்ற வேறுபாட்டைத் தொடங்கி வைக்கிறோம். வேறுபாடு கொஞ்ச நாட்களில் ஆதிக்கமாகி, தொடர்ந்து உரிமை மறுப்பாகவும் ஆகி விடுகிறது. 

இதைக் கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள் தான் முதலில் நம்மை ஊக்குவிக்கிறார்கள். வளர வளர, நம்முடைய அதிகாரம் அதிகமாகும் போதெல்லாம் அதன் கீழ் இருக்கும் பெண்களின் உரிமைகளை நம்மால் எந்த அளவு தடுக்கவும் மறுக்கவும் முடியுமோ அந்த அளவு மறுத்து வருகிறோம். அக்கா, அம்மா, மனைவி, குழந்தை என ஏதாவது ஒரு வழியில் அவர்கள் உரிமையைத் தடுப்பதையே பெருமையாக நினைக்கிறோம். தொடர்ச்சியாக இப்படி உரிமையைத் தடுப்பதன் மூலம் நமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கிறோம்.

காலப் போக்கில் இப்படி உரிமை மறுக்கப் படுவது தான் இயற்கை எனப் பெண்களும் நம்புகிறார்கள். அது தான் உண்மையான அக்கறை என்று அவர்களே நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். "நான் ரோட்டில போறப்ப கீழ குனிஞ்சு நடன்னு, என் தம்பி திட்டுவான்" என்று பெருமையாகச் சொல்லும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். சரி பொது வெளியில் தான் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு ஆண் இப்படிச் செய்கிறான் என்று நினைத்தால் தவறு. படுக்கை அறையில் கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் போது கூட அவளுடைய உரிமைகைகளைப் பெரும்பாலான ஆண்கள் மறுத்துவிடுகிறார்கள்.

The Patience Stone படத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்து கோமாவில் இருக்கும் கணவனை வெளியில் போர் நடப்பதால் வீட்டில் வைத்து கவனிப்பாள் நாயகி. இது நாள் வரை முகம் கொடுத்துக் கூடப் பேசாத கணவனிடம், தன்னுடைய ரகசியங்கள் அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் துப்பாக்கி முனையில் அவளை வன்புணர்வு செய்கிறான். அவள் ஒரு விலைமாது என்று நினைத்துக் காசை விட்டெரிந்து செல்கிறான்.

இதன் பின் அழுதுகொண்டே கணவனிடம் அவள் சொல்வாள். "உனக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீயும் இப்படித் தான் இருந்த, நம்ம முதல் இரவை நினைச்சுப் பாரு. ஒரு வெறிப் பிடிச்சவன் மாதிரி என் மேல பாய்ஞ்சியே தவிர என்னைப் பத்தி நீ எதுவுமே யோசிக்கல. வலியைத் தவிர எனக்கு எதுவும் தோணல. உனக்கு நான் ஒரு சதைக் குவியல் அவ்வளவு தான்"

தொடர்ந்து அந்த இராணுவத்தான் வருகிறான். குடும்பத்தால் கைவிடப் பட்ட அவள், இரண்டு குழந்தைகளுக்கான செலவிற்காகவும், கணவனின் மருத்துவச் செலவிற்காகவும் ஒத்துக் கொள்கிறாள். இடையில் அவன் மீது கொஞ்சம் பரிதாபமும் வருகிறது. வழக்கம் போலச் சுயநினைவின்றி இருக்கும் கணவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொல்கிறாள், "அந்தப் பையன் சீக்கிரமா கத்துக்கொள்கிறான், சொல்றதை செய்கிறான். ஆனால் உன்கிட்ட இப்படி எல்லாம் என்னால சொல்ல முடியுமா? சொன்னா நிச்சயம் என்னைக் கொன்னுடுவ. ஆனால் அவன் கையைப் பிடித்து என்னால் வழிகாட்ட முடிகிறது"..

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குக் குற்ற உணர்வு வருகிறது, பெண்கள் இதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாதே, நான் ஏன் இப்படிப் பேசுகிறேன் என்று உடனே குரானைத் தேடி எடுத்து அணைத்துக் கொள்வாள். ஏதோ பாலஸ்தீனில் மட்டும் இந்த நிலைமை இல்லை, நம் ஊரிலும் இதே தான். ஒரு பெண் தனது பாலியல் சார்ந்த தேவைகளைத் தன்னுடைய கணவனிடம் கூட உரிமையாகத் தெரிவிக்க முடியாது.

அதைப் பற்றிப் பேசுவதே பிடிக்காத மாதிரி பெண்ணாக இருந்தால் மட்டும் அவள் சுத்தமானவள் என்று ஆண்கள் நம்புவார்கள் என்ற எண்ணம் மறைமுகமாகப் பெண்களுக்கும் பரவி விட்டது. ஒவ்வொரு ஆணும் அதையே தான் விரும்புகிறான். ஒன்றும் தெரியாத பெண்ணிற்குத் தான் தான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். பெண்களுக்குத் தெரிந்திரிந்தால் கூட "இவளுக்கு எப்படித் தெரியும்" என்று ரகுவரன் மாதிரி புருஷன் சந்தேகப் பட்டு விடுவானோ என்று பயந்தே வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

வெறுப்புகளை உடனே காட்டிவிடலாம், ஆனால் பெண்களால் விருப்பங்களை எளிதாக வெளியே சொல்லி விட முடியாது. அதற்கு ஒரு நாளும் நாம் அவர்களை அனுமதித்ததில்லை. ஆரம்பத்தில் தன்னுடைய எதிர்பார்ப்புகள் ஒரு நாலாவது பூர்த்தியாகும் என்று ஏங்குபவர்கள், குழந்தைகள் பிறந்த பின்பு நமக்கு வைத்தது அவ்வளவு தான் என்று சிறிது மனக் குமுறலோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதைக் கூட வெளியில் யாரிடமும் பகிர முடியாது.

ஒரு அறைக்குள்ளேயே, சகியாக ஏற்றுக் கொண்ட மனைவியின் உரிமையைத் தெரிந்தோ, தெரியாமலோ மறுத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் எப்படிப் பொதுவில் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

Friday, 14 February 2014

சிறுகதை - பேய்களைத் தின்னும் மீன்கள் 

அதிகாலையும் லாந்தரும் கலந்த இருட்டில் பெட்டிக் கடைத் தாத்தா சில்லறை எண்ணுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு, வெளியே "ஆத்துல மருந்து போட்டுருக்காங்களாம்" என்று யாரோ பேசிக்கொண்டது கடைக்குள் பரவிய காலை வெளிச்சத்தைப் போல் கொஞ்சம் கொஞ்சமாக மூளை வரை எட்டியது. டீத்தூளையும் சில்லரையும் வாங்கிக் கொண்டு ஒரே எட்டில் வீட்டிற்கு ஓடி, அடுப்பங்கரை ஜன்னல் வழியே எறிந்து விட்டு, மீண்டும் தெருவுக்கு வந்து எல்லோரும் பேசிக்கொள்வதைக் கவனித்தான். அவர்கள் பேசியதில் இருந்து மருந்து போட்டது ஓரளவு உறுதியானாலும் எல்லாரும் பெரியவர்களாகவே இருந்ததால் யாரிடமும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தான். அத்தையுடன் குளிக்கச்சென்று கொண்டிருந்த ராமதாசை பின்னால் சென்று இழுத்துக் கேட்டான் "எங்கடா மருந்து போட்டுருக்காங்க?" 

"பொம்பளைங்க துறைக்கும், மாட்டுப் பாதைக்கும் நடுவுலடா, சீக்கிரம் வா, எங்க மாமா எல்லாம் முன்னாடியே போய்டுச்சு" என்று சொல்லிவிட்டு ஓடி அத்தையுடன் சேர்ந்துகொண்டான். 

"டீ போட்டு எவ்வளோ நேரம் ஆச்சு, எங்கடா போன? அப்புறம் ஆறிப் போச்சு, சுடவச்சுத் தான்னு கேக்க வேண்டியது" என்று திட்டிக் கொண்டே டம்ப்ளரை நாகமணி நீட்ட, அனிச்சையாய் வாங்கிக் குடித்துக் கொண்டே கேட்டான் "பொம்பளைங்க துறைக்கு மேற்க்க மருந்து போட்டுருக்காங்களாம், சீக்கிரம் கெளம்புமா நாமளும் போலாம்" 
"சாமான்லாம் வெளக்குறதுக்கு எடுத்து வைக்கணும், உங்க அப்பாயியும் டீ குடிச்சுட்டு தரட்டும் போலாம், ஆனா மீன் புடிச்சுகிட்டு இருந்தா ஸ்கூலுக்குப் போவ வேணாமா?" 

"எட்டு மணிக்குள்ள வந்துரலாம்மா, சீக்கிரம் வா" எனச் சொல்லிக் கொண்டே துண்டையும் சோப்பையும் எடுத்துக் கொண்டு தயாராக நின்றான். 

காவிரிக்குப் போகும் வழி முழுவதும் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதக்கும் மீன்கள் பற்றிய கற்பனையே வினோத்துக்கு நிறைந்திருந்தது. ரமேஷ் சொல்லி இருக்கிறான் "வெடியும் போடலாம், மருந்தும் கலக்கலாம். வெடி போட்டா அப்படியே மீனெல்லாம் தெறிச்சு செத்துப் போயி கரைல கூட விழுந்திடும், ஆனா மருந்து போட்டா சின்ன மீனுங்க மட்டும்தான் சாவும். போட்ட எடத்துல எல்லாமே செத்துடும், பெரிய மீனெல்லாம் மயங்கிப் போய் இருக்கும்". 

வினோத் நம்ப முடியாமல் கேட்டான் 
"அது எப்படிடா தண்ணிக்குள்ள வெடி வெடிக்கும்?" 
அதுக்கு ஒரு வெடி இருக்குடா, தண்ணிக்குள்ள கொஞ்ச நேரம் வச்சிருந்தாலே வெடிச்சுடும், ஒரு தடவை தாடிக்காரன் கொல்லைக்கு நேரா இருக்குற நடுவாய்க்கால் குழியில வெடி போட்டு எங்க பெரியப்பா ஒரு சிமெண்ட்டு சாக்கு புல்லா மீன் அள்ளுனாரு" 

மருந்தோ வெடியோ போட்ட கதைகளை ஏராளமாகக் கேட்டிருந்தாலும் அவனுக்கு அவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையாகவே இருந்தன. காவிரியைப் பொருத்தவரை கரைக்கு அருகில் வரும் குட்டி மீன்களைக் காலால் உதைத்து அவை கரையில் துள்ளும் போது பிடிப்பது மட்டும்தான் அவனுக்குத் தெரியும். வாய்க்காலில் இட்லித் துணியில் ஒட்டி இருக்கும் துகள்களுக்காக வரும் கெண்டைகளைச் சேலையில் பிடித்துத் தருவாள் நாகமணி. சின்ன மீன்களின் மீதான ஆசை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, மொத்தமாகக் காவிரியில் உள்ள அத்தனை மீன்களையும் ஒரு நாள் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவனுள் நிலை கொண்டிருந்தது. 

அனால் அன்று எல்லா மீன்களையும் வெடி சாகடிக்கவில்லை. சிலர் கையிலும், துண்டிலும் மீன்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். கரையில் ஆங்காங்கே சில மீன்கள் ஈ மொய்க்கக் கிடந்தன. ஈயா அல்லது கொசுவா எனச் சொல்ல முடியாது, அனால் மீன்கள் செத்துக் கிடந்தால் கூட்டமாக அவை மொய்க்கும். "செத்த மீனை எல்லாம் வுட்டுடு, கெறக்கத்தில அலையுறத மட்டும் புடி, ஆழத்துக்குப் போவம இந்தப் பக்கம் வர்றத மட்டும் புடிச்சுட்டு வா" எனச் சொல்லிவிட்டுக் கரையில் சாமான்களை வைத்து விட்டு நாகமணியும் மீன் பிடிக்க இறங்கினாள். 

தண்ணீரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அரை மயக்க மீன்கள், நெளிந்து கொண்டே முன்னேற முயற்சித்து அவன் கையில் மாட்டிக்கொண்டிருந்தன. ஆண்கள் எல்லோரும் மேற்கே மருந்து போட்ட திட்டுக்கு அருகில் பெரிய மீன்களைப் பிடிப்பதில் இருந்தனர், நாகமணியுடன் வராமல் இருந்திருந்தால் வினோத்தும் அங்கே ஓடி இருப்பான். இங்கே எளிதாக ஓடும் மீன்களைப் பிடிப்பது ஒரு கட்டத்தில் நேரடியாக மீன்குழம்பை சாப்பிடுவதைப் போல் சராசரியாகத் தோன்றியது. கையில் மீன்கள் நிறைந்ததால் அவை நழுவிவிடாமல் இருக்க, துண்டை விரித்து வைத்து விட்டு வந்து பிடிக்கும் ஒவ்வொரு மீனாக அதில் போட்டுக் கொண்டிருந்தான். 

நாகமணி பாத்திரங்களைக் கழுவிவிட்டு மீன்களைக் கழுவி கொண்டே கத்தினாள் "டேய் நேரமாவுது வரியா இல்லையா?, ஸ்கூல்க்கு போறாப்புல இல்லையா?" 

"வரேன்மா" எனக் கத்திக் கொண்டே, ஒரு ஆறாவைத் துரத்திக் கொண்டிருந்தான். மெதுவாகத் தான் நகர்ந்தது, அனால் ஒரு பாம்பு ஏற்படுத்தும் பயத்தில் பாதியை அது அவனுள் கிளப்பி இருந்தது, இன்னும் நேரமானால் அம்மா தண்ணீருக்கே இறங்கி வந்து அடிப்பாள் எனத் தெரியும், அனால் ஆறாவைப் பிடிக்கவும் பயம் விடவில்லை. கடைசியில் மணலில் பாதிப் புதைந்திருந்த ஒரு கிழிந்த துணியினுள் நுழைந்த ஆறாவை துணியுடன் சேர்த்துப் பிடித்துக் கரையில் போட்டான். 

அன்று பள்ளியில் முழுவதும் மீன்பிடி கதைகள்தான். ஒவ்வொருவரும் எவ்வளவு மீன்களைப் பிடித்தனர் என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை வீட்டில் வறுத்த மீன்களைச் சாப்பிடும் போது ஒவ்வொரு மீனையும் அவனுக்கு அடையாளம் தெரிந்தது. கிலோவாக வாங்கும்போது எல்லாமே கெண்டையாகவோ, விராலாகவோ இருக்கும், ஆனால் இன்று ஒரு கதம்பமாக இருந்தது. விடிந்ததும் அம்மாவுக்கு முன்னால் காவிரிக்குச் சென்று, மீன் பிடிக்கும் ஆசை அவனைத் தூங்கவிடாமலே செய்தது. 

கரையில் நேற்று இறந்திருந்த மீன்கள் மட்டும் எறும்புகள் மொய்த்தக் கூடுகளாய்க் கிடந்தன. இன்று எல்லா மீன்களும் தண்ணீரில் முன்னெப்போதும் இல்லாததை விட வேகமாகப் போவதாக அவனுக்குத் தோன்றியது. "ஏன்டா இன்னிக்குலாம் மருந்து போடமாட்டங்களா?" என மூர்த்தியிடம் கேட்டான். "டெய்லி எல்லாம் மருந்து போட்டா மீன்காரங்க சண்டைக்கு வந்துருவாங்கடா, நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே நாம போலாம்டா மீன் புடிக்க, நீ உங்க வீட்ல ஏதாச்சும் சொல்லிட்டு வந்துரு" என்றான் மூர்த்தி. என்ன சொல்லி சமாளிப்பது என்ற பயம் அந்த வினாடி முதலே மனதில் ஒட்டிக் கொண்டது.

முதல் குட்டையில் கிடைத்த கெண்டைக் குஞ்சுகளைக் கம்பியில் குத்தி பலி கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள், மொத்தம் ஏழு பேர். "உன்கிட்ட கம்பி இல்லைல?, நீ இந்த சாரதாஸ் பையை வச்சுக்க, நாங்க கம்பியில கெண்டையை சைடுல இருந்து விரட்டுறப்ப அது நடுவுல தான் ராக்கெட் மாதிரி வரும், நீ உன் காலை சேத்து வச்சு நின்னாப் போதும், அது கால் கலங்கல் தண்ணியிலேயே நின்னுடும்" என்று சொல்லி மூர்த்தி அவனை நடுவில் நிறுத்தி மற்றவர்களுடன் கம்பியில் மீன்களை அணைத்து விரட்டினான். சுரேஷ் மீன்கள் ஆழத்தில் இறங்காமல் பார்த்துக் கொண்டான். எல்லோரும் அணைத்துக் குவித்த போது, அவன் காலில் எதோ உரசுவது போல இருந்தது, உடனே "டேய் இங்கடா, இங்கடா" எனக் கத்தினான். கம்பியைப் போட்டுவிட்டு வந்த சுரேஷ், வினோத் காலுக்கு முன்னும் பின்னும் மெதுவாகக் கையை நகர்த்தி மீனைத் தலையுடன் பிடித்துத் தூக்கினான் "ஒக்காளி, கருஞ்ஜிலேபி". 

"எப்படிடா அது கால்கிட்டயே நிக்கிது" என்று கேட்டுக் கொண்டே, பையை விரித்து, மீனை வாங்கிக் கொண்டான். மூர்த்தி விளக்கிக்கொண்டே வந்தான் "கெண்டைய ஓட விட்டு கம்பியில அடிச்சா அது கலங்கல் எங்க இருக்கோ அங்க போய்த் தாண்டா ஒண்டும், காலை அசைக்காம இருந்தா புடிச்சுடலாம்". போகும் வழியில் சில கெண்டைகள் கம்பி அடியிலேயே தலை சிதறி மிதந்தன. தண்ணீர் ஆழத்தில் அடி சரியாக விழாமல் மயங்கிய மீன்களைக் கையிலேயே பிடித்தார்கள். 

ஆற்றின் குறுக்கே நடக்கும் போது "விரால் எல்லாம் குழியிலதான் இருக்கும், ஒன்னு கட்டுத்தூண்டில் போட்டு புடிக்கணும், இல்லை கையால தலைய அமுக்கியோ, வெட்டியோ தான் புடிக்கணும். முட்டை விடாத கெண்டை எல்லாம் மெட்ராஸ் குச்சி திட்டு வேருக்குள்ளதான் பதுங்கி இருக்கும், கையை வச்சு வச்சு பாத்தா ஈசியா மாட்டிக்கும், குருசட்டி எல்லாம் சப்பையா குச்சி, எலைக்கு அடியில படுத்து இருக்கும், காலை வச்சே மிதிச்சுப் புடிக்கலாம், ராட்டு சாயந்தர நேரத்துல தான் வெளியவரும், கொடுக்கை மட்டும் பாத்துப் புடிச்சுட்டா பெரியா ராட்டைக் கூடப் புடிச்சுடலாம் " என்று வரிசையாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே வந்தான். 

"இதுல சில பேய் மீன் எல்லாம் இருக்குது தெரியுமா? ஆத்துல செத்துப் போறவங்களைத் திங்கிற மீனுங்க எல்லாம் பேயா மாறிடும். எங்க திண்டுக்கரை மாமா ஒரு நாள் நைட்டு ஊத்தா போட்டப்ப இப்படித்தான், ஒரு பெரிய கெண்டை, இத்தாசோடு... இவங்களும் வெரட்டிகிட்டே போய்ட்டாங்களாம், ஆனா ஒரு சின்னக் குழியில போய்க் காணாமலே போயிடுச்சாம், இவங்க குழிக்கு போற தண்ணிய மணல்ல அணைகட்டி நிறுத்திட்டு, மறுநா அந்தக் குழியில போய்ப் பாத்தா அப்படி ஒரு மீனே இல்லையாம். பேய் மீன் எல்லாம் இப்படியே போக்கு காட்டியே ஆத்துக்குள்ள இழுத்துட்டு போய்டும்டா, எங்க போறோம்னே தெரியாது " 

"கதை வுடாதடா" 
"டேய் எங்க அம்மா சத்தியமாடா, நீ வேணும்னா எங்க மாமா வரப்ப கேளு" என்று சத்தியமே செய்தான் மூர்த்தி. அதுவரை மீன் பிடிப்பதில் மட்டுமே குறியாக அலைந்து கொண்டிருந்த அனைவரும் ஒரு வித பயத்துடனே கூட்டத்தில் இருந்து பிரியாமல் சேர்ந்து வரத் தொடங்கினார்கள். சின்னதும் பெரியதுமாகப் பையும் நிரம்பிக் கொண்டே வந்தது. 

"மணி எத்தனடா இருக்கும், எங்க அம்மா வந்துரும், சாவி என்கிட்ட இருக்கு" என்று கேட்டான் சக்தி. 
"ஒரு மணி இருக்கும்டா" 
"இப்ப தானேடா வந்தோம், அதுக்குள்ளே எப்படி இவ்ளோ நேரம் ஆச்சு, போலாம்டா" என நெளிந்து கொண்டே சொன்னான் சக்தி. 
"மீனுக்கு வந்தாலே இப்படித் தான்டா, போறதே தெரியாது, முன்னாடிலாம் பழைய சோத்த ஒரு டப்பால போட்டுக் கொண்டு வந்துருவோம், போறதுன்னா போலாம்டா, நான் போயிட்டு மாடு ஓட்ட சாயிந்தரம் வருவேன் மறுபடியும்" என்று சொல்லிக் கொண்டே கம்பியைக் கரையில் போட்டான் மூர்த்தி. 

கொண்டு வந்திருந்த பிளேடால் மீன்களை உலசி, எடுத்துக் கொண்டார்கள், கல்யாணத்திற்குப் போன அம்மாவும் அப்பாவும் மாலைதான் வருவார்கள் எனத் தெரிந்ததால், வினோத் இன்னும் கொஞ்சம் குளிக்கலாம் எனக் கேட்க அது அப்படியே தொட்டுப் பிடிக்கும் விளையாட்டாக மாறியது.  திட்டு திட்டாகக் குதித்துத் தண்ணீரில் மூழ்கி மறைந்து கொண்டிருந்தார்கள். முதலில் தொடப்படுபவன் அடுத்த முறை துரத்த வேண்டும். சக்தி மட்டும் முன்னரே கிளம்பி விட்டான். ஓரளவு வெயில் மங்கிய பின்தான் விளையாடியது போதும் என நிறுத்தி மீனைப் பிரித்துக் கொண்டு கிளம்பினார்கள். வினோத்துக்குப் பத்து மீன்களுக்கு மேல் கிடைத்தது. அனால் "வீட்டில் கொடுத்தால் என்ன சொல்வாள் அம்மா" எனப் பயந்து கொண்டே வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டிற்கு வந்த போது ஓரளவு இருட்டி விட்டது. 

நாகமணியின் குரலும் டிவி சத்தமும் கலந்து கேட்டதால் எவ்வளவு நேரம் வாசலுக்கு வெளியே நின்று ஒட்டுக் கேட்டாலும் அவள் பேசுவதை அறிய முடியாமல், வேறு வழி இன்றி வீட்டுக்குள் நுழைந்தான் 

"எங்கடா போன காலைல இருந்து, எங்கல்லாம் தேடுறது?, கையில என்ன பை?" 
"மீனு மா" 
"எடுங்க, லீவுல படிக்காம மீனு புடிக்கப் போயிருக்க" என்று கத்திக் கொண்டே அடுப்பங்கரைக்கு ஓடினாள் அடிக்கக் குச்சி எடுக்க, அவன் கையில் இருந்த மீனைக் கீழே போட்டுவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தான். இரவு ஒன்பது மணி வரை பஞ்சாயத்து டிவியைப் பார்த்துக் கொண்டே வீட்டுப் பக்கம் வரவில்லை, கிழவி வந்து "அம்மா அடிக்காது, சோறு திங்கவா" என்று கையோடு இழுத்துச் சென்றாள். தட்டில் சாதம் போட்டு மீனும் வறுத்து வைக்கப் பட்டிருந்தது. 

அவன் சாப்பிடும் போது நாகமனியும் ஆரம்பித்தாள், "உங்க தாத்தனும் இப்படித்தான், டயரைக் கொழுத்திகிட்டு, விடிய விடிய மீனுக்குப் போறேன்னு போயிட்டு, ஒரு சட்டி மீனோட வருவாரு, உங்க அம்மாயி தொறத்தி விடாத குறையா விரட்டுவாங்க" எந்தக் கதையையும் காதில் வாங்காமல், மீனை ரசித்துத் தின்று கொண்டிருந்தான். 

"ஒரு கிலோ மீனு எவ்வளோடா?" 
அவனுக்கே தெரியவில்லை. "இப்படி நாலு மீனுக்காக ஒரு நாளை படிக்காம  வீணாக்குனா, நஷ்டம் உனக்குத்தான், ஒழுங்கா படிச்சா ஒரு நாளைக்குப் பத்து கிலோ மீனு வாங்குற அளவு சம்பாதிக்கலாம்", ஆனால் மீன் பிடிப்பதில் உள்ள சந்தோஷம் என்பது மீன் வாங்குவதில் இல்லை என்பதில் அவன் தெளிவாக இருந்தான். தூங்கப் போகும் வரை இப்படி ஏதாவது ஒரு அறிவுரை வந்து விழுந்துகொண்டே இருந்தது. அப்பா வந்தால் கண்டிப்பாக அடி நிச்சயம், அதற்குள்ளே தூங்கிவிட வேண்டும் என்று தூங்குவதைப் போல் நடிக்க ஆரம்பித்தான். 

குட்டைகளில் புரண்டு மீன் பிடிக்கும் போது டிராயரில் ஒட்டிக் கொள்ளும் ஒரு வாசனையே அவனை எப்போதும் மீன்களைப் பற்றி நினைக்க வைத்தது. நாகமணிக்கு அது "மீன் கவிச்ச". மீன் குழம்பு வைக்கும் போது தண்ணீர் குடிக்கும் டம்ப்ளர்களில் ஒட்டிக் கொள்ளும் வாடையை அவனும் கவிச்சை என்று தான் சொல்லுவான். ஆனால் அது மீன் பிடிக்கும் போது தன் மேல் வரும் போது மட்டும் ரசிக்கும் மணமாகவே தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டு அன்று பிடித்த மீன்களை மீண்டும் ஒரு முறை நினைவுகளில் பிடித்துப் பார்த்தான். இப்போது அவனிடம் மட்டுமே கம்பி இருந்தது, எல்லோரும் இவன் பிடித்த மீன்களை வாங்க பைகளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். காவிரியில் இருந்த மொத்த மீன்களையும் அவனுடைய கம்பியால் அடித்துப் பிடிக்கும் முன், பகல் முழுக்க அலைந்த அசதியில் தூக்கம் அவனைப் பிடித்துக் கொண்டது. 

ஆனால் மறுநாள் முதல் காவிரிக்கு கிளம்பும் போது 'போனோம் வந்தோம்ன்னு இருக்கணும், மீனு கீனு புடிக்குறன்னு யாராச்சும் சொன்னாங்க, செத்த" என்று நாகமணி மறக்காமல் சொல்லிவிடுவாள். ஆனால், குழி குழியாக எங்கே மீன் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே ஏழே முக்கால் கோவில் மணி அடிக்கும் வரை தேடிவிட்டு பிறகு அவசரமாகக் குளித்து விட்டு ஓடி வருவான். கோடை நெருங்க நெருங்க முன் ஓடையில் இருந்த திட்டுகள் எல்லாம் வற்றிக் கொண்டே வந்தன. மீன் இருக்கும் குட்டைகளைப் பார்க்கவே குளிக்கும் ஓடையைத் தாண்டி கொஞ்சம் நடக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்தக் கோவில் மணி மட்டும் அவன் மீன்களைத் தேடுவதற்கு முன்னரே அடித்து விடுகிறது. 

பனிரெண்டாம் வகுப்புக்கு பரீட்சையை முன்னிட்டு மதியம் மட்டுமே பள்ளி என அட்டவணை கொடுத்ததும், ஒரு நாள் கண்டிப்பாகக் காலையில் மீன் பிடிக்கப் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டான். அடுத்த வாரம் நாகமணி "எழவுக்குப் போயிட்டுச் சாயந்தரம்தான் வருவேன், சோற தின்னுட்டு ஸ்கூல்க்கு கெளம்பிப் போ" என்று சொன்னதும், உடனே மூர்த்தி வீட்டுக்குச் சென்று 'மீனுக்குப் போலாம்டா, எங்க அம்மா போனதும் வரேன்" என்று சொல்லிவைத்தான். அவள் சேலை கட்டும் வரை, கிழவிக்குத் தெரியாமல் பிடிக்கப் போகும் மீன்களை எப்படி வறுப்பது என்பதையே யோசித்துக் கொண்டிருந்தான். "அம்மா எழவுக்குப் போக வேன் வந்துருச்சாம்" என்று சொல்லி அவள் நகர்ந்த உடனே மூர்த்தி வீட்டுக்கு ஓடினான். 

இரண்டு பேர் மட்டும், ஒரு கம்பியுடன் திட்டு திட்டாகப் போய்க் கொண்டிருந்தார்கள், சில ஸ்கேல் கெண்டைகளைத் தவிர ஒன்றும் பெரிதாக மாட்டவில்லை. ஒரு குழியில் ஒரு உளுவையை மெதுவாக மண்ணில் புதைய விட்டு மூர்த்தி பிடித்தான். "இந்தக் குழியில கண்டிப்பா நெறைய இருக்கும்டா" என அங்கேயே ஒரு ஊற்று பறித்து உளுவையை விட்டுவிட்டு, அதைக் கொக்குத் தூக்காமல் இருக்கக் கொஞ்சம் இலைகளைப் போட்டு மூடிவிட்டு, ஆழத்தில் இறங்கினான். 

கொஞ்ச நேரத்தில் "டேய் ஒரு பெரிய விராலு, கால்ல அடிச்சுட்டு போய்டுச்சு, கொஞ்சம் கலக்காம இருந்தா புடிச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே, செடி வேர்களில் கையை நகர்த்திக் கொண்டிருந்தான். வினோத் ஒரு பக்கம் சின்னக் கெண்டைகளைக் கம்பியால் விரட்டிக் கொண்டிருந்தான். ஆறு வழக்கம் போல நேரத்தை அடித்துச் சென்று கொண்டிருந்தது. எலிமெண்டரி ஸ்கூலின் ஒரு மணி பெல் சத்தம் காதில் விழுந்ததும் 

"ஒன்றை மணிக்கு நமக்கு ஸ்கூல்டா, நம்ம ஸ்கூல் பெல்லுலாம் இங்க கேக்காதுல்ல? எலிமெண்டரி ஸ்கூல் பெல்லு அடிக்குது பாரு , இப்பவே கெளம்புனாதான்டா, போகலன்னா எங்க அம்மா கொன்னேபுடும்" என்று மணலில் போட்டிருந்த டிராயர் சட்டையை எடுத்துப் போட ஆரம்பித்தான் வினோத். 
"நீ போடா நான் வரல, இந்த விரால புடிச்சுட்டு தான் வருவேன்" என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி கால்களால் விராலைத் தேடிக் கொண்டிருந்தான். 

முட்டாசுகளை மட்டும்தான் வினோத் அதுவரை பிடித்திருந்தான். விரால்கள் காவிரியின் ராஜா. சாரையைப் போன்ற அடி உடல் வண்ணங்களுடன் வீட்டில் வாங்கப்படும் விரால்கள் குண்டான்களில் நீந்தும் போது மட்டுமே பார்த்திருக்கிறான். சஷ்டி அன்று வாங்கப்பட்ட விராலை தண்ணீர் ஊற்றி மறு நாளுக்காக வைத்திருந்த போது, இரவில் மூடி இருந்த பித்தளைத் தாம்பூலத்தைப் பறக்க விட்டு, துள்ளி தரையில் விழுந்து சுவாசித்துக் கொண்டிருந்த விராலை பயத்துடன் பார்த்திருக்கிறான். அது ராஜா தான். விராலைப் பிடிப்பதைப் பற்றிய அவனுடைய ஆர்வம் லீவ் போட்டுவிடலாம் என யோசிக்க வைத்தது. நாகமணி கையெழுத்தை அவனே போட்டுவிடுவான், ஆனால் பை, யுனிபார்ம் எல்லாம் வீட்டில் இருக்குப்பதால் கிழவி நிச்சயம் ஸ்கூல் போகவில்லை என்பதைச் சொல்லிவிடுவாள், இதை எல்லாம் யோசித்துக்கொண்டே, மதியம் மட்டும் தான் ஸ்கூல் என்பதால், லேட்டாக வந்தால் வெளியே நிற்கவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பொறுமையாகவே நடந்தான். 

கொஞ்ச நேரத்தில் அவனுக்கு எந்தப் பக்கம் போவதென்று தெரியவில்லை. அகண்ட காவிரியில் முக்கால்வாசி தாண்டி இருந்தான். எல்லாமே திட்டுகளாகவும் மணலாகவுமே தெரிந்தது. ஒரு வேளை, பேய் மீன் தான் தங்களை இழுத்து வந்துவிட்டதோ என்று ஒரு கணம் தோன்ற "அப்போ மூர்த்திப் பேய் மீனைத்தான் தேடிக்கிட்டு இருப்பானோ?" என்று பயம் சூழ்ந்தது. வந்தவழியே ஓடி அந்தத் திட்டை அடைந்தான், மூர்த்தி இவன் வருவதைப் பார்த்து "ஏண்டா போகலையா?" என்றான் 

"ஆத்துல ஒரு மணிக்கு நெறைய பேய் இருக்கும்ன்னு கேள்வி பட்டிருக்கேன், முழுகி செத்தவங்க எல்லாம் அலைவாங்கன்னு சொல்லி இருக்காங்க, அதான் சேந்து போலாம்னு வந்துட்டேன், ஆமா உனக்கு பயமா இல்லையா?" 
"நான் அரணா கயித்துல ஈயம் கட்டி இருக்கேன்டா, ஊக்கு வேற இருக்கு" 
"நான் வெள்ளியிலேயே போட்டிருக்கேன்டா" 
""பேய் இரும்புக்கும் ஈயத்துக்கும் தான்டா பயப்புடும், நீ உட்காரு போலாம்" என்று சொல்லிவிட்டு மூர்த்தி மீண்டும் தேட ஆரம்பித்தான். 

மூர்த்தியைப் பார்த்ததும் ஓரளவு பயம் தெளிந்திருந்தாலும் லீவ் போடுவதை நினைத்து இன்னும் உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது. "வெரா புடிச்சுட்டுப் போனா கூட எங்க அம்மா வுடாதுடா, நீ ஒரு ஊக்கு மட்டும் குடு, நான் போறேண்டா" என்று மீண்டும் கிளம்பத் தொடங்கிய போது, திடீரென ஏதோ தட்டுப்பட்டு மூர்த்தித் தண்ணீரில் கால்களை அலச 

"என்னடா மாட்டிருச்சா?" எனக் கரையிலிருந்து கேட்டான் வினோத். 
"கால்ல மிதிச்சுட்டேன், ஆனா எஸ்ஸாகிடுச்சுடா, நீ அந்தப் பக்கம் இருந்து வா" என்று மூர்த்தி சொன்னதும், வேகமாக டிராயரைக் கழட்டிவிட்டு சுற்றி வந்து இறங்கினான், தூரத்தில் எலிமெண்டரி ஸ்கூலின் ஒன்னே முக்கால் மணி அடித்தது.