Thursday, 27 February 2014


கல்விக் கூடங்களும் கழிப்பிடங்களும்

சேத்தன் பகத்தின் நாவலில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், கழிவறைக்குச் செல்ல அவரிடம் அனுமதி கேட்பாள், அவர் சிரித்துவிட்டு "எந்த ஊர்? கல்லூரிக்குப் போனதில்லையா?" என்று கேட்பார். "கோயம்புத்தூர், டிஸ்டிங்கஷன்" என்பார் அந்தப் பெண். அவர் மீண்டும் சிரித்துவிட்டு "கழிவறைக்குச் செலவதற்கு எல்லாம் அனுமதி கேட்கத் தேவை இல்லை" என்பார். 

மேலோட்டமாகப் படித்தபோது தென்னிந்தியர்கள் மீதான அவரின் பகடிகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றினாலும், ஒரு கணம் பள்ளியில் ஆசிரியர் முன்பு ஒற்றை விரலை நீட்டி "சார் சார்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தது நியாபகத்திற்கு வந்து தான் சென்றது. ஒருவன் கேட்கும் போது, மற்றவர்கள் நிச்சயம் சிரிப்பார்கள். கொஞ்சம் வயது முதிர்ந்த பின்பு, இந்தக் கேலிகளுக்குப் பயந்து நேரம்கேட்ட நேரத்தில் ஆசிரியரிடம் கேட்காமல் இருக்கப் பழகிவிட்டோம்

ஆனால் அதெற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடைவேளை நேரங்களில் கூடச் சில பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், பொதுவாகக் கலையில் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். மாலை வேளைகளில் அதுவும் இல்லை. இரண்டு மணிக்கு மதிய உணவு முடித்து வரும் குழந்தைகள் ஐந்து மணி வரை கழிவறைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.

இடைவேளைக்கான பதினைந்து நிமிடங்களை அதற்கு முந்தைய வகுப்பு ஆசிரியரோ, அல்லது அதன் பின் வருபவரோ சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர். பாடத்திட்டத்தைச் சீக்கிரம் முடிக்க இந்தக் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார்கள். காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள், மதிய உணவு நேரத்தில் தான் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். அதுவும், மொத்தக் குழந்தைகளும் அந்த நேரத்தில் தான் கழிவறைக்குச் செல்ல வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலுக்குப் பயந்தே பல குழந்தைகள் மாலை வரை சிறுநீர் கழிக்காமலேயே இருந்துவிடுகிறார்கள்.

முக்கியமாக இந்தக் கொடுமைகள் பெண்கள் பள்ளிகளில் தான் அதிகம் நடக்கின்றன. மதிய உணவு இடைவேளையில் கூடப் படித்துக் கொண்டே சாப்பிடச் சொல்லும் சில மெட்ரிக் பள்ளிகளைப் போல இவைகளும் , மதிப்பெண்களுக்காகக் குழந்தைகளின் அறிவையும், உடலையும் சேர்த்தே சீரழிக்கிறார்கள். பள்ளிகள் மட்டுமல்ல, நகர்ப்புறங்களில் உள்ள டியுஷன் சென்டர்களில் ஒரே நேரத்தில் நூறு பேருக்குப் பாடம் நடத்த இடவசதி செய்யப் படுகிறதே தவிர அவர்களுக்குத் தேவையான கழிப்பிட வசதிகள் பற்றி அமைப்பாளர்களோ, பெற்றோர்களோ கவலைப்படுவதில்லை.

தமிழகப் பள்ளிகளில் 20 சதவீதப் பள்ளிகளில் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கழிப்பிட வசதி உள்ள பள்ளிகளில் அவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கப் படுவதில்லை. கட்டாய இலவசக் கல்வியைப் போல, பள்ளிகளில் கழிப்பிடமும் மாணவர்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், அதிகாரிகளோ, ஆசிரியர்களோ அதைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை.

கழிப்பிடங்களைப் பயன்படுத்த முடியாததால், குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்கின்றனர். இது சிறுநீரகக் கல் உருவாக ஒரு முக்கியக் காரணியாக அமைந்து விடுகிறது. அதிகப்படியான உப்பு, கால்சியம் உட்கொள்ளுதல், ஆகியனவும் சிறுநீரகக் கற்களுக்குக் காரணங்களாகச் சொல்லப் பட்டாலும், போதிய தண்ணீர் பருகாதது தான் முக்கியக் காரணியாக இருக்கிறது. குழந்தைகளிடம் குறிப்பாக வளரிளம் பருவ பெண்களிடம் சிறுநீரகக் கல் உருவாதல் கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிறுநீரகக் கற்களால் வரும் வலி, பிரசவ வலிக்கு நிகரானதாகக் கருதப் படுகிறது, இதில் முக்கியமானது குழந்தைகளுக்கு எங்கே வலி இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லத் தெரியாது, இதனால் அதனைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு ஆகும் காலத் தாமதத்தில் வலியால் அவதிப்படப் போவது நம் குழந்தைகளே.

ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் அறிவியல் ஆசியர் திரு ஜெகதீசன், சிறுநீரகக் கல் என்றால் என்ன என்று விளக்கி, "உனக்குச் சிறுநீர் வந்தால் என்னிடம் கேட்கவேண்டும் என்று அவசியமில்லை, என்னுடைய வகுப்பு ஆரம்பிக்கும் முன் ஐந்து நிமிடம் நீ தாரளமாகக் கழிப்பிடதைப் பயன்படுத்திவிட்டு வரலாம், ஐந்து நிமிடம் நீ என் பாடங்களைத் தவறவிட்டால் ஒன்றும் பெரிதாக இழக்கப் போவதில்லை" என்று சொல்லிக் கொடுத்தது பாடங்களை விட வாழக்கைக்கு நிறையக் கொடுத்தது. பல பள்ளிகளில் இன்று அநேகக் குழந்தைகள் சுண்டு விரலை நீட்டி அனுமதி கேட்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment