துரத்தப்படும் மரணங்கள்
அரிவாள் எனது கழுத்தில் விழுந்த போது தெறித்த ரத்தத் துளிகளுடன் நிமிர்ந்து பார்த்தேன், எங்கோ உயரத்தில் நின்று கொண்டு நீண்ட கைப்பிடி உடைய அரிவாளுடன் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இரண்டு வினாடிகள் தான், அதற்குள் ஒரு கூரிய ஈட்டி அவன் மார்பைப் பிளந்தது. அவன் நிமிர்ந்து மேலே பார்த்த போது, ஈட்டி எறிந்த கைகளுடன் ஒருவன் சிரித்தான், அடுத்த இரண்டு வினாடிகளில் அவனுடைய கழுத்தில் ஒரு கத்தி இறங்கியது, அவனும் மேலே நிமிர்ந்து பார்த்தான்.யாரும் சாகவில்லை, அனால் எல்லோரும் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், மேலே பார்க்கப் பார்க்க இது தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்கிறது. அருகில் இதே போல் ஒரு வரிசையில் யானைகளும் இதே போல் ஒன்றை ஒன்று தங்களுக்குத் தெரிந்த முறையில் கொலை செய்து கொண்டே செல்கின்றன. அதற்கு அருகில் வரிக்குதிரைகள், கீரிகள், ஓநாய்கள், மீன்கள், பாக்டீரியாக்கள்........ பக்கவாட்டு வரிசையும் மேல் நோக்கிய வரிசையும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. உயிரின் கடைசித் துளி மட்டுமே எல்லோரிடமும் மிஞ்சுகிறது.
வெளியேறத் துடிக்கும் கடைசி உயிர்த் துளியை என்னால் முடிந்த வரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில் இருக்கும் யானையும் வரிக்குதிரையும் இதையே செய்து கொண்டிருக்கின்றன. எனக்கு மேலே என்னை வெட்டியவனும் தன் உயிரின் கடைசித் துளியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் உயிரின் மேலான பற்று மட்டுமே எங்களைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்கிறேன்.
இந்த சங்கிலியில் ஒருவன் அல்லது ஒரு குதிரை அல்லது ஒரு திமிங்கலம் "எனக்கு இந்த உயிர் வேண்டாம்" என விட்டு விட்டால் இந்த மொத்த அமைப்பும் சிதைந்து விடும் என்று உணர்ந்து கொண்டேன். உயிர் வேண்டாம் என வெறுக்கும் ஒருவன் இந்த சங்கிலியில் எங்காவது இருக்கிறானா எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் என் உயிர்த் துளியை மட்டும் இணைப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வெளியில் இருந்து சங்கிலித் தொடரை உற்று நோக்குகிறேன்
அது முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது, அதன் தொடக்கத்தை அறிய இன்னும் வெளியே வந்து பார்க்கிறேன், நட்சத்திரங்களுக்கு வெளியே செல்லச் செல்ல சங்கிலி மெதுவாக வளைகிறது. நான் இப்பொழுது அண்டங்களைத் தாண்டி வெளியில் சென்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் , வளைந்த சங்கிலி மேலும் வளைந்து தொடக்கப் புள்ளி இல்லாத ஒரு வட்டமாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment